காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இதுதவிர, மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படுகிறன.
இந்த பேருந்து நிலைய வளாகத்தில், தனியார் உணவகம், டீ கடை மற்றும் பல தரப்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேறுவதற்கு ஏற்ப, போதிய வடி கால்வாய் வசதி இல்லை.
இதனால், தனியார் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, 'பிளாஸ்டிக் பக்கெட்' களில் பிடித்து வந்து, ஒருவர் தொட்டியில் ஊற்ற வேண்டி உள்ளது. அதன் அருகே இருக்கும் பிற கடைக்காரர்கள் துர்நாற்றத்தை சுவாசித்து வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலைய கடைக்காரர்களுக்கு ஏற்ப, வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, வியாபாரிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேருந்து நிலைய வியாபாரிகள் கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு, முறையாக வரியினங்களை செலுத்தி கடைகளை நடத்தி வருகிறோம். அதற்கு ஏற்ப, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் மற்றும் வடிகால்வாய் ஆகிய வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இங்கு, கழிவு நீர் வடிந்து செல்லும் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகம் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.