அன்னுார்:பேரூராட்சி மன்ற எதிர்ப்பை மீறி அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 41 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. பழைய பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தை புதுப்பிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தை பழைய பேரூராட்சி கட்டடத்திற்கு மாற்றக் கோரிய தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர் காஞ்சனா பேசுகையில், அன்னுார் தென்னம்பாளையம் ரோடு அகலம் குறைவாக உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது, இங்கு திருமண மண்டபம் அமைக்க அனுமதி கோரி கடந்த டிசம்பரில் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் வந்த போது போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு கண்ட பிறகு கட்டட அனுமதி வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதைய செயல் அலுவலர் மன்ற தீர்மானத்தை மீறி அனுமதி வழங்கி உள்ளார். அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பெரும்பாலான கவுன்சிலர்கள் இதை ஆதரித்து பேசினர். அதிகாரியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என செயல் அலுவலர் கூறினார், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பலாம் என்றார்.
இந்த பிரச்னையால் ஒரு மணி நேரம் கூட்டம் ஸ்தம்பித்தது. ஒரு மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கவுன்சிலர் புவனேஸ்வரி பேசுகையில், எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குப்பை எடுக்கின்றனர். குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளது. ஒரு போர்வெல் வறண்டு விட்டது. மற்றொரு போர்வெல்லில் நீர் குறைந்து விட்டது. எப்போது அழைத்தாலும் அதிகாரிகள் வருவதில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன், என்றார். கவுன்சிலர் அங்காத்தாள் பேசுகையில், சண்முகா நகரில் பிரதான குழாய் பதித்தும் குடிநீர் இணைப்பு தராமல் இழுத்தடிக்கின்றனர். அன்பு நகருக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது, என்றார்.
கவுன்சிலர் குணசுந்தரி பேசுகையில், சாணம் பாளையம் கிராமமே இருட்டில் உள்ளது. தெருவிளக்கு பொருத்தவில்லை. ஜனனி கார்டன் மற்றும் மாகாளியம்மன் கோவில் வீதிகளில் மிகக் குறைவாக தண்ணீர் வருகிறது, என்றார்.
கவுன்சிலர் ரேஷ்மி பேசுகையில், வார்டில் பணிகள் செய்யும்போது கவுன்சிலருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. பிரச்சனை குறித்து தகவல் தெரிவித்தால் தாமதமாக வருகின்றனர், என்றார்.
கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில், ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்த வேண்டும். வீட்டு இணைப்பு இல்லாத இடத்தில் உப்பு தண்ணீர் பொதுக்குழாய் அமைக்க வேண்டும், என்றார்.
கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 30 கோடி ரூபாயில் அன்னுார் பேரூராட்சியில் குழாய் பதித்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'வீடு மற்றும் வீட்டு மனை அங்கீகாரத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் கூறி, இழுத்தடிப்பதால் பலரும் பேரூராட்சியில் வீடு கட்டவே தயங்குகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் அங்கீகாரம் பெற முடியாமல் முடங்கி கிடக்கின்றன. பலர் பாதியிலேயே கட்டுமான பணியை நிறுத்தி உள்ளனர்,' என புகார் தெரிவித்தனர்.