அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், 65 முழு நேர அங்கன்வாடி மையங்களும், 44 குறு மையங்களும் உள்ளன. இவற்றில் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் என 157 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
அன்னுாரில், சிறுமுகை ரோட்டில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் அல்லது பயிற்சி நடக்கிறது. மேலும் பொருட்கள் எடுத்துச் செல்ல இங்கு வந்து செல்கின்றனர்.
அலுவலகத்தின் எதிர்ப்புறம் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. டாஸ்மாக் கடை எதிரே தின்பண்டங்கள் கடைகள் அதிக அளவில் உள்ளன. சாலையின் ஓரத்திலும் அலுவலகத்துக்கு செல்லும் வழியிலும் உட்கார்ந்து மது அருந்துகின்றனர்.
சிறுமுகை சாலையிலிருந்து அலுவலகம் செல்லும் பாதையில் கண்ணாடி மது பாட்டில்களை அடிக்கடி உடைத்து போட்டு விடுகின்றனர், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கவர்கள் என அப்பகுதியே திறந்த வெளி 'பார்' ஆக உள்ளது.
மாலையில் பயிற்சி முடித்து ஆறு மணிக்கு அலுவலகத்தில் இருந்து வரும்போது குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக ஊழியர்களும் அங்கன்வாடி ஆசிரியர்களும் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.