திருப்பூர்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வார விழா, திருப்பூரில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு பணியாளர்களுக்கான தமிழில் குறிப்புகள் எழுதுவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில், மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோ பேசியதாவது:
அரசு பணியாளர்கள், அனைத்து கோப்புக்களையும் தமிழில் உருவாக்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தொழில்நுட்ப ரீதியான மருத்துவம், மின்வாரியம் போன்ற சில துறை சார்ந்த கருத்துருக்கள் உயர் மட்டத்திலிருந்தே ஆங்கிலத்தில் வரும்; அதுசார்ந்த அரசாணைகளும், ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்படும். அவற்றை மொழி பெயர்ப்பதற்கான முயற்சிகளை அரசு அலுவலர்கள்தான் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆறாவது நாளான இன்று, காலை, 10:00 மணிக்கு, சிக்கண்ணா அரசு கல்லுாரியில், ஆட்சி மொழி பட்டிமன்றம் நடைபெறுகிறது. தமிழ் துறை தலைவர் பாலசுப்பிரமணியம் நடுவராக பங்கேற்று பேசுகிறார்.