சென்னை,சென்னையில் 'புட் ஸ்ட்ரீட்' என்ற உணவுத் திடலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, சின்னமலை அருகே, ராஜிவ்காந்தி சாலையில் இருந்து ராஜ்பவன் வரை 2 கி.மீ., நீளத்தை, 20 கோடி ரூபாய் செலவில் உணவுத் திடலாக மாற்ற, மாநகராட்சி திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது.
இது குறித்து மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:
சென்னையில் தெருவோர கடைகள் உள்ளிட்ட ஹோட்டல்களில் பல்சுவை உணவுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒழுங்கற்ற நிலையில் காணப்படுகின்றன.
அதேபோல பல்சுவை உணவுகளும், ஒரே இடத்தில் கிடைக்காத நிலை உள்ளது. இதற்காக, உணவுத் திடலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, சாலையின் இருபுறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்பட்டு, அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் பல்சுவை உணவுகள் கிடைக்கும். பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.