அண்ணா நகர்,நியூ ஆவடி சாலையோரத்தில், பல ஆண்டுகளாக மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
சென்னையில், கடந்த 2015ல் பெய்த கனமழையால், வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தனர். அதன் பின், பாதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக, மழை நீர் வடிகால் அமைக்க அரசு திட்டமிட்டது. இதன்படி, பல லட்சம் ரூபாய் செலவில் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், அதைத்தொடர்ந்து 2020, 21ல் ஏற்பட்ட மழையிலும், சில இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
ஆனால், ஆண்டுதோறும் பாதிக்கப்படும் ஒரு சில இடங்களை, சென்னை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை. அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா நகர், அயனாவரம், ஐ.சி.எப்., உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும், நியூ ஆவடி சாலை உள்ளது.
இந்த சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில், பல ஆண்டுகளாக மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சாலையை விட தாழ்வாக உள்ள இருபுறங்களிலும், ஆண்டுதோறும் மழை நீர் புகுந்து, மக்கள் தத்தளிக்கின்றனர்.
குறிப்பாக, நியூ ஆவடி சாலையில் உள்ள அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலாங்காடு சுடுகாடு, அன்னை சத்யா நகர் மற்றும் அயனாவரம் அதை ஒட்டி உள்ள குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக நியூ ஆவடி சாலை, அதிகாரிகள் கண்களுக்கு தெரிவதில்லை. பாதிக்கப்படும் போது மட்டும் கண்துடைப்புக்கு ஆய்வு செய்கின்றனர்.
குறிப்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல முக்கிய கோப்புகள் இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
அதேபோல், வேலாங்காடு சுடுகாட்டிலும் தண்ணீர் தேங்கி, குளம் போல் மாறுகிறது. இதனால், புதைக்கப்பட்ட உடல்கள் வெளியில் வந்து மிதக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கப்படுகின்றன.
ஆனால், இந்த பகுதிகளில் வடிகால் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழக முதல்வர் இதை கவனித்து, இந்த சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.