வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்ற தகவல், 'வாய்ஸ் ஆப் கொராசன்' என்ற ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பத்திரிகையில் வெளியானது. தற்போது, அதன் பின்னணி தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு அக்., 23ல், கோவை கோட்டை ஈஷ்வரன் கோவில் அருகில், ஒரு கார் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் இறந்தார். காரில் எடுத்து செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்தது என, போலீஸ் தரப்பில் துவக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின், இது குண்டு வெடிப்பு சம்பவம் என்றும், ஜமேஷா முபின், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர் என்றும், அதிர்ச்சி தகவல் வெளியானது.
கடந்த ஆண்டு நவ., 19ல் கர்நாடக மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் எடுத்துச் சென்ற குக்கர் குண்டு வெடித்தது. ஆட்டோவில் சென்ற ஷாருக் என்ற இளைஞர் படுகாயம் அடைந்ததார். அவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மூளைச்சலவை
இந்நிலையில், இந்த இரு வெடிகுண்டு சம்பவங்களுக்கும் பின்னணியில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு உள்ளதாக, 'வாய்ஸ் ஆப் கொராசன்' என்ற பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இங்கு இருக்கும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் இயக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்திய இளைஞர்கள் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து, ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் இருவர் தான் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்ததில் கையை இழந்த ஹாருக் மற்றும் கோவை குண்டு வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின்.

இவர்களை போல, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஐ.எஸ்., அமைப்பில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அடுத்தடுத்து என்ன செய்ய போகின்றனர் என்ற விசாரணை நடந்து வருகிறது.
'வாய்ஸ் ஆப் கொராசன்' பத்திரிகையில், இந்தியாவின் மூன்று தலைவர்கள் வில்லன்களாக காட்டப்படுகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிரான சிந்தனையை, அந்த பத்திரிகை தொடர்ந்து விதைக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில், பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு தடை செய்யப்பட்டது. உடனே, இந்த பத்திரிகையில், 'பி.எப்.ஐ.,யில் பணியாற்றியோர், இனிஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்' என, பகிரங்க கோரிக்கை விடப்பட்டது.

சிலீப்பர் செல்
கோவை, மங்களூரு சம்பவங்களை தொடர்ந்து, என்.ஐ.ஏ.,வும், தமிழக போலீசாரும் ஈரோடு, சேலம், ஆம்பூர், வாணியம்பாடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில், ஐ.எஸ்., தொடர்புடையவர்கள் என கண்டறிந்து, பலரை கைது செய்துள்ளனர். அவர்களில் பலர் தற்போது, ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்களில் சிலரை மீண்டும் கைது செய்து விசாரித்தபோது தான், பயங்கரவாதிகளின் பத்திரிகைகள் குறித்த தகவல் கிடைத்தது.
தமிழகத்தில் ஹிந்து இளைஞர்கள் பலரை, ஐ.எஸ்., அமைப்பு மூளை சலவை செய்து, தங்கள் பாதைக்கு கொண்டு வந்துள்ளது. அவர்கள், ஐ.எஸ்., அமைப்பின், 'சிலீப்பர் செல்'களாக செயல்படுகின்றனர். அவர்களுக்காக, இந்த பத்திரிகையில் ரகசிய தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.