வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விழுப்புரம்: தனது குறைகளை சொன்ன பெண் ஒருவரை, 'வாயை மூடு' எனக்கூறிய அமைச்சர் பொன்முடி, அதனை சமாளித்து குறைகளை கூறுகிறார் அது நல்லது தானே என மழுப்பி பேச்சை தொடர்ந்தார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. பலபணிகள் நடக்கின்றன. கிராமங்களிலேயும் நடைபெற்றிருக்கிறது. நகரங்களிலும் நடைபெற்றிருக்கிறது.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் நேரு மூலம், நகர்ப்புற வளர்ச்சிக்காக ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார். அது சென்னையாக இருந்தாலும் சரி.. திருக்கோவிலூராக இருந்தாலும் சரி... விழுப்புரமாக இருந்தாலும் சரி... என்றார்.
அப்போது பெண் ஒருவர் எழுந்து குறைகளை கூறினார். அப்போது, அவரை கேலி செய்த பொன்முடி, 'வாயை மூடிக்கிட்டிரு' என்றார். தொடர்ந்து அந்த பெண்ணிடம், உன் வூட்டுக்காரர் (கணவர்)வந்திருக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த பெண்ணின் பதிலை கேட்ட பிறகு பொன்முடி பேசுகையில், 'போயிட்டாரா... பாவம்...' என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொண்டர்கள் சத்தம் போட துவங்கியதை தொடர்ந்து அமைதியாக இருக்கும்படி கூறிய பொன்முடி, அந்தம்மா குறைய சொல்லுது நல்லது தானே எனக்கூறி பேச்சை தொடர்ந்தார்.

பொன்முடி இப்படி பேசுவது முதல்முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் நடந்த விழாவில் , குறைகளை கூறிய பெண்களிடம், 'இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க... கேட்க வந்துட்டீங்க... உட்காருங்க...' எனப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு முன்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திட்டம் தொடர்பாக பேசுகையில், 'பஸ்சில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? எல்லாம் ஓசி... ஓசி பஸ்சில் போகிறீர்கள்' எனக்கூறி பலரில் கண்டனத்திற்கு ஆளானார்.