தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்| vigilence raid | Dinamalar

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Updated : மார் 15, 2023 | Added : மார் 15, 2023 | கருத்துகள் (14) | |
திருப்பூர்: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி ரூ. பல லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிலேகா அடங்கிய குழுவினர் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகம் மற்றும் இன்ஸ்பெக்டர்
vigilence raid தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

திருப்பூர்: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி ரூ. பல லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.


லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்


திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிலேகா அடங்கிய குழுவினர் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகம் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி குழுவினர் வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் 'டெஸ்ட்' மைதானம் ஆகிய இடங்களில் நேற்று மாலை, 4:00 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


latest tamil news


நெருப்பெரிச்சலில் உள்ள ஜாயிண்ட் -1, 2 மற்றும் நெருப்பெரிச்சல் சார்-பதிவாளர் அலுவலகம் என, மூன்று அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், டேபிள்களில் சோதனை செய்தனர். பொதுமக்களை சோதனை செய்து வெளியே அனுப்பினர். உள்ளே இருந்த பத்திர எழுத்தர், புரோக்கர் ஆகியோரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத, 61 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

மைதானத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் அறையில் சோதனை மேற்கொண்டனர். அவரது டேபிள்கள், வெளியே நின்றிருந்த டிரைவிங் ஸ்கூல் வாகனம், டூவீலர் ஆகியவற்றை தீவிரமாக சோதனை செய்தனர். உள்ளே இருந்த, நான்கு புரோக்கர் உள்ளிட்டோரிடம் இருந்து கணக்கில் காட்டாத, ஒரு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினர். இரு இடங்களில் நடந்த திடீர் ரெய்டில், 2 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


பத்திரிக்கையாளர் பெயரில் புரோக்கர்?


லஞ்ச ஒழிப்பு துறையினர் மோட்டார் வாகன ஆய்வாளர் அறையில் சோதனை மேற்கொள்ளும் போது, அறைக்குள் இருந்த நபர்களை சோதனைக்கு பின்னரே வெளியற்றப்பட்டனர். அதில், புரோக்கர் ஒருவரிடம் விசாரித்தனர். அவர் பத்திரிக்கை நிருபராக உள்ளதாக அறிமுகமானார். அவரின் ஐ.டி., கார்டை வாங்கி விசாரித்தனர். பத்திரிக்கையாளர் பெயரில், புரோக்கர்கள் நடமாடி பணம் வசூலிப்பதும் தெரிய வந்துள்ளது.மயிலாடுதுறை


மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.50 ஆயிரத்து 700 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மனோகரன், இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்து வெளி நபர்களை மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு நான்கு மணி நேரம் சோதனை மேற்கொண்டதில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜிடம் இருந்த ரூ. 27 ஆயிரத்து 400 மற்றும் தனி நபர்கள் நான்கு பேரிடமிருந்து ரூ. 23 ஆயிரத்து 300 என மொத்தம் ரூ 50 ஆயிரத்து 700 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரக்கோணம்:


அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் புரோக்கர்கள் வைத்து லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்துராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் முதல் நடத்தி வரும் சோதனையில் இரவு 6:00 மணி நிரலவப்படி கணக்கில் வராத 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. அலுவலக ஊழியர்கள், புரோக்கர்கள் என 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்கோவை :


கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத, ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.வேலுாரில் ரூ 1 லட்சம் பறிமுதல்வேலுார்: வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

subtitle@ஆத்தூர்சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி கண்காணிப்பாளர்கள் ராஜா, மலர்விழி மற்றும் உதவியாளர் சுகனேஸ்வரன் உள்ளிட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த நபர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
ஆய்வையொட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்தின் முகப்பு உள்ளிட்ட கதவுகளை பூட்டி வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.சோதனையின்போது, ஆத்துாரை சேர்ந்த, பிரபுதாஸ் என்பவரிடம், 15 ஆயிரம் ரூபாய் மற்றும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரிடம், 3,700 ரூபாய் என, மொத்தம் 18 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.சோதனைக்கு சென்றபோது, கோபிநாத் தான் வைத்திருந்த, 3,700 ரூபாயை, ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். அந்த பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடலூர்கடலூர் மாநகராட்சியில் வீட்டுவரி, தண்ணீர் வரி, கடை வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு,இறப்பு சான்றிதழ் மற்றும் ஒப்பந்த பணி உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் வாங்கபடுவதாக தொடர் புகார் வந்தது.


கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அறை கதவுகளை மூடி சோதனை நடக்கிறது.


தேனிதேனி பேருந்து நிலையம் அருகே உள்ள திட்டச்சாலையில் இயங்கும் சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.


புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. இதனால், ஆலங்குடியில் உள்ள சில அரசு அலுவலகத்திலும் இருந்த அதிகாரிகள் சிலர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டனர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை ஒன்றின் நிருபர் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.


குன்னூர்அதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூர் பத்திர பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது. இங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 550 ரூபாய் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தூத்துக்குடிதூத்துக்குடி, மில்லர் புரம் 2வது தெருவில் உள்ள தமிழக அரசு நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தஞ்சாவூரில் சோதனை: ரூ. 52,430 சிக்கியது


தஞ்சாவூர்: - தஞ்சாவூர் மாவட்டத்தில், இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய, சோதனையில் கணக்கில் வராத 52,430 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில், லாரியில் வரும் நெல் மூட்டைகள் குறித்த விபரங்கள், லாரிகளில் வரும் நெல் மூட்டைகளை சேமிப்பு குடோனில் வைப்பதற்காக லஞ்சம் கொடுக்கப்படுகிறதா போன்ற அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜூ தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலர் முத்துவடிவேல் ஆகியோர் ஆவணங்களை சோதனை நடத்தினர்.இதில், கணக்கில் வராத 34,800 ரூபாய் ரொக்கம் சிக்கியது.


இதேபோல, கும்பகோணத்தில் வணிகவரித் துறையின் பறக்கும் படை வாகனத்தில், லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 17,630 ரூபாய் ரொக்கத்தைக் கைப்பற்றினர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குன்னூரில் ரூ. 1.27 லட்சம் பறிமுதல்


குன்னூர் : குன்னூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் துணை பதிவு துறை அலுவலகத்தில் இன்று, லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மாலை 3:30 மணி முதல் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என15 பேர் உள்ளே இருந்தனர்.


அனைவரிடமும் சோதனை செய்து விசாரணை நடத்தினர். இதில், புரோக்கர்கள்,
மீடியேட்டர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக டி.எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில்,


" புரோக்கர்கள், மீடியேட்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள், அதிகாரிகளிடம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. " என்றார்.
சிவகங்கை:-


காளையார் கோவில் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் விவசாயிகளிடம் கமிஷன் பெற்றதை கண்டு பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டு வரும் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ ,தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ,ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜா முகமது ஆகியோர் நேற்று மாலை காளையார் கோவில் அருகே புல்லுக்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை செய்தனர்


அதில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 30 வீதம் வசூலிப்பது தெரிந்தது. இங்கு 322 நெல் மூடைகள் வாங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ. 9, 660 லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இக்கொள்முதல் நிலைய கிளார்க் அர்ஜுனன் (34) வங்கி கணக்கில் ஆன்லைன் வரவு வைக்கப்பட்ட ரூ .2.10 லட்சம் இருப்பதை அறிந்து, இத்தொகை எப்படி வந்தது என விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X