ரிசர்வ் வங்கித் தகவல் படி, 2022 - 23 நிதியாண்டில் வங்கிகள் வாங்கிய கடன் அளவு செப்டம்பரில் முதல் முறையாக ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியது. அக்டோபரிலும் அந்த நிலைக்கு மேல் நீடித்தது.
ரெப்போ வட்டி உயர்வு உபரி பணப்புழக்கத்தில் சரிவுக்கு வழிவகுத்ததால், வங்கிகள் வாங்கிய கடன் அளவு முதல் முறையாக செப்டம்பர் 2022ல் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியது. பிப்ரவரி 24 நிலவரப்படி வங்கிகள் வாங்கியுள்ள அவுட்ஸ்டான்டிங் கடனின் அளவு சராசரியாக ரூ. 4.2 லட்சம் கோடி. இது முந்தைய 2021 - 22 நிதியாண்டில் ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தாக ஆர்.பி.ஐ., புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பணப்புழக்க நிலைமைகள் கணிசமாக இறுக்கமடைந்து காணப்படுவதால், நிதியாண்டில் மீதமுள்ள பதினைந்து நாட்களிலும் வங்கிக் கடன்கள் உயர வாய்ப்புள்ளது. இந்த மொத்தக் கடன்கள் உள்நாட்டில் இருந்து பெறப்பட்டவை மட்டுமின்றி, வங்கி அமைப்புக்கு வெளியே, வெளிநாடுகளில் இருந்தும் இந்திய வங்கிகள் கடன் பெற்றுள்ளன. ஆர்.பி.ஐ.,யிடம் இருந்து பெற்ற கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
![]()
|
ரிசர்வ் வங்கியின் புள்ளியியல் இணைப்பிதழில் வணிக வங்கிகளுக்கான கடன்கள் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், பெரும்பாலும் குறுகிய கால கடன் வழிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது வங்கிகளுக்கு இடையேயான ரெப்போ செயல்பாடுகள் மற்றும் ட்ரை பார்ட்டி ரெப்போக்கள் போன்ற நிதிகள் அவை. மேலும் பத்திரங்கள் வெளியீடும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. வைப்புத் தொகை சான்றிதழ்கள் அதில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் இயக்குனர் சவுமியாஜித் கூறுகையில், “பத்திரங்கள் வெளியீடு மூலம் வங்கிகள் திரட்டியுள்ள நிகர தொகை ரூ.50,000 - ரூ.60,000 கோடி இருக்கும். கடன் வளர்ச்சி வலுவாகவும், நிலையாகவும் இருக்கும் போது, வங்கிகள் அதிக வைப்புத்தொகை போன்ற நிலையான தீர்வைத் தேட வேண்டும். குறுகிய காலக் கடன்கள் பெற்று அவர்களால் கடன் கொடுக்க முடியாது. பத்திரங்கள் போன்ற நீண்ட கால கடன்கள் நல்லது. குறுகிய கால கடன்களை நீடித்த அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியாது.” என்கிறார்.
கடன் வளர்ச்சி இருக்கும் அளவுக்கு டெபாசிட் வளர்ச்சி இல்லை. பரந்த இடைவெளி இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆர்.பி.ஐ.,யின் பிப்ரவரி 24 தகவல் படி, வங்கிக் கடன் வளர்ச்சி ஆண்டுக்கு 15.5 சதவீதம். டெபாசிட் வளர்ச்சி 10.1 சதவீதம்.
பண இருப்பு சரிவு
![]()
|
2022 ஏப் - மே காலக்கட்டத்தில் சுமார் ரூ.7.4 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் உபரி பண இருப்பு, கடந்த டிசம்பர் - ஜனவரியில் ரூ.1.6 லட்சம் கோடியாக சுருங்கியது. வலுவான கடன் வளர்ச்சி, ரிசர்வ் வங்கியின் அரசாங்கப் பத்திரங்களின் விற்பனை மற்றும் ரூபாய் மதிப்பை தக்க வைக்க அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடுகள் ஆகியவை பணப்புழக்க உபரியைக் குறைத்துள்ளன.
வங்கிக் கடன்கள் முதன் முறையாக ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டிய செப்டம்பரில், ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு சரியாமல் இருக்க 1,000 கோடி டாலரை கரன்சி மார்க்கெட்டில் விற்றது. ரிசர்வ் வங்கியின் டாலர் விற்பனை, வங்கி அமைப்பிலிருந்து ரூபாயின் இருப்பை வெளியேற்றியது.