திருநெல்வேலி:ஜி.எஸ்.டி, வரிவிதிப்பை பில்லில் குறிப்பிடாத இனிப்புக் கடை, அதன் நுகர்வோருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மானி 36.
வழக்கறிஞர். 2020 ஜூலை 13ல் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் என்ற கடையில் 200 ரூபாய்க்கு இனிப்பு, காரம் வாங்கினார். அதற்குரிய பில் கேட்டார்.
கடைக்காரர் முதலில் பில் தர மறுத்தார். பின்னர் வெறுமனே ரூ. 200 என எழுதிய பில்லை கொடுத்தார். ஆனால் அதில் ஜி.எஸ்.டி, எண், ஜி.எஸ்.டி, வரி தொகை குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகையிலும், ரசீதுகளிலும் ஜி.எஸ்.டி., எண் குறிப்பிடப்பட வேண்டும்.
எனவே இதை சேவை குறைபாடு என வழக்கறிஞர் பிரம்மா வாயிலாக திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் நுகர்வோருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானி கூறுகையில், ''இந்த வழக்கு தொடர்ந்த சில தினங்களில் அந்த ஸ்வீட் ஸ்டால் பெயர் பலகையில் ஜி.எஸ்.டி., எண் குறிப்பிட்டு விட்டனர்.
''பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு என்ற பெயரில் பொதுமக்களிடம் வரியைப் பெற்று அதை அரசுக்கு செலுத்துவதில்லை.
''ஒரு குறிப்பிட்ட ஜி.எஸ்.டி., எண் வாயிலாக அரசுக்கு நாம் செலுத்தும் வரி அரசுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்பதையும் தற்போது தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. எனவே அரசுக்குரிய ஜி.எஸ்.டி.,வரியை போலி பில்கள் வாயிலாக வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வுக்காக இந்த வழக்கை தொடர்ந்தேன்.
''தற்போது நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாகக் கிடைக்கும் 7 ஆயிரம் ரூபாயையும் அந்த இனிப்புக் கடைக்காரரிடமே திரும்ப வழங்கி விடுவேன். ஒருவேளை அவர் வாங்க மறுத்தால் அதை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்புவேன்.
''எங்கள் நோக்கம் யாருக்கும் நஷ்டம் ஏற்படுத்துவதில்லை. அரசு விதிமுறைகளை எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.