விழுப்புரம்:புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக, 31.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த இளந்துறையைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 62; இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த பிரபாகர் என்பவர் மூலம், புதுச்சேரி தர்மாபுரியைச் சேர்ந்த மணிகண்டன் அறிமுகமானார்.
நாராயணசாமியிடம் நல்லவர் போல பழகிய மணிகண்டன், தானும் தன் மனைவி மகேஸ்வரியும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை செய்வதாகவும், ஜிப்மரில் வேலை வாங்கித் தர முடியும் என, கூறியுள்ளார்.
இதை நம்பிய நாராயணசாமி, அவரது மருமகள் சுகன்யாவுக்கு நர்ஸ் வேலைக்காக பணம் கொடுத்துள்ளார். மேலும், அவருக்கு தெரிந்த 6 பேரை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
அவர்களும் வேலை வாங்கி தரும்படி 40 லட்சம் ரூபாயை மணிகண்டன், பிரபாகர், மகேஸ்வரி மற்றும் மணிகண்டன் தந்தை முனியப்பன், தாய் சாந்தி, தங்கை நித்தியா ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, பணி நியமன உத்தரவு மற்றும் அடையாள அட்டையை மணிகண்டன் கொடுத்துள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்றபோது அது போலி என தெரிந்தது. பணத்தை திரும்பக் கேட்டதற்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர்.
மீதமுள்ள 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்த புகார்படி, மணிகண்டன் உட்பட 6 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, முனியப்பனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.