சேலம்:வளர்ப்பவர்களால் கைவிடப்பட்ட மாடுகளுக்கு, 'கோசாலை' ஏற்படுத்தி, வாழ்வு கொடுத்து வரும் பட்டதாரி தம்பதி, கிடைக்கும் பாலை, குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, உலகரைமேட்டைச் சேர்ந்த ஸ்ரீராம், 32; எம்.எஸ்சி., - எம்.பில்., படித்துள்ளார். இவரது மனைவி குமுதவள்ளி, 27, எம்.ஏ., ஆங்கிலம் படித்தவர்.
கோசாலை
இந்த தம்பதி, 2012ம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்ட மற்றும் வளர்ப்பவர்களால் கைவிடப்பட்ட, கோவில்களில் பராமரிப்பின்றி கண்டுகொள்ளப்படாத மாடுகளை பராமரிக்கும் பணியை துவங்கினர்.
இதற்காக தங்கள் வீட்டருகே 'ஸ்ரீகிருஷ்ணா கோ சம்ப்ரக்ஷனா' எனும் அறக்கட்டளையை தொடங்கினர்.
அதன் நிர்வாக குழுவில், 15 பேரை இணைத்து தாங்கள் பராமரித்த மாடுகள் மூலம் கோசாலையை ஏற்படுத்தினர்.
தற்போது, புங்கனுார் குட்டை, உம்பளச்சேரி, மயிலை, காங்கேயம், தஞ்சாவூர் குட்டை, மலை நாட்டு குட்டை, ரெட்சிந்தி உள்ளிட்ட மாடுகளை இங்கு பராமரிக்கின்றனர்.
பராமரிப்புக்கு மட்டும் தினமும் 35 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இங்கு, 15 பேர் தொடர்ந்து பணிபுரிகின்றனர். கோசாலை பராமரிப்பு நிர்வாகத்தை, ஸ்ரீராம் - குமுதவள்ளி தம்பதி செய்து வருகின்றனர்.
சாணம், கோமியத்தை, கோசாலை நிர்வாக செலவுக்கு விற்கும் இவர்கள், காலை, மாலையில் மாடுகளிடம் கறக்கப்படும், 15 லிட்டர் பாலை அப்பகுதியில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
குறிப்பாக, 3 மாதம் முதல் ஒரு வயது வரையான குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்குகின்றனர்.
பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்ட, வறுமையில் வாடும் முதியோருக்கும் இலவசமாக பால் வழங்கப்படுகிறது.
திணறல்
கோசாலை மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், இயற்கை உரம் வினியோகிப்பதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. அதற்கேற்ப கோசாலைக்கு புதிதாக மாடுகளும் வந்து கொண்டிருப்பதால், நிர்வாக செலவு அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து பராமரிப்பதில் தம்பதி திணறுகின்றனர்.
இவர்களால் பராமரிக்கப்படும் மாடுகளில் நோய் வாய்ப்பட்டோ, வயது முதிர்வாலோ இறப்பை சந்தித்த, 80க்கும் மேற்பட்ட மாடுகளை, கோசாலை அருகே புதைத்துள்ளனர்.
கோசாலை குறித்து ஸ்ரீராம் கூறியதாவது:
நாட்டு மாட்டு இனங்களை காக்கவும், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தாலும் கோசாலையை உருவாக்கினோம்.
முதலில், ஐந்து மாடுகளுடன் துவங்கினோம். தற்போது, 115 மாடுகள், 22 கன்றுகள் உள்ளன. மக்கள், ஆன்மிக நண்பர்களின் பங்களிப்புடன் சேவையை தொடர்கிறோம். கோசாலைக்கு மாடுகளை தானமாக வழங்க விரும்பினாலோ, தீவனம் வழங்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோசாலைக்கு உதவ, 99446 33705 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.