தென்னிந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் என்று பெங்களூருவைச் சொல்லலாம். தற்போது அம்மாநில அரசு, பிற மாவட்டங்களுக்கும் முதலீடுகளைத் திருப்ப, பெங்களூருவின் நெரிசலைக் குறைக்க தொலைநோக்கு திட்டமிடலைத் துவங்கியுள்ளது. பெங்களூருவுக்கு வெளியே பிற நகரங்களில் துவங்கப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு மாநில ஜிஎஸ்டி, மார்க்கெட்டிங் மற்றும் காப்புரிமை தாக்கல் செலவுகளை அரசு ஏற்பதற்கான யோசனையில் உள்ளது.
2032க்குள் கர்நாடகாவை 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதில் ஸ்டார்ட்அப்களை உள்ளடக்கியுள்ளனர். தற்போது தலைநகர் பெங்களூருவுக்கு வெளியே சுமார் 3 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை ஐ.டி., ரீடெயில், வங்கி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயம், லாஜிஸ்டிக், போக்குவரத்து என பல துறைகளைச் சேர்ந்தவை. இந்நிலையில் 2032-க்குள் இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக்க திட்டமிட்டுள்ளனர்.
![]()
|
இது தொடர்பான செயல்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூருக்கு வெளியே மைசூரு, மங்களூரு, துமகுரு, ஹுப்பள்ளி, தார்வாட், ஷிவமொக்கா, பெலகாவி, மாண்டியா, சாம்ராஜ்நகர், உடுப்பி, மணிப்பால் மற்றும் கலபுர்கி ஆகிய இடங்களில் தொழில்நுட்ப கிளஸ்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 'பெங்களூரு வளர்ச்சி நிதிக்கு அப்பால்' என்ற பெயரில் ரூ.1,000 கோடி ஒதுக்க செயல் திட்டம் முன்மொழிகிறது. ஒரு ஐடியாவை புரோட்டோடைப்பாக மாற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கும் 'எலிவேட்' என்ற திட்டத்தை ஏற்கனவே அரசு துவங்கியுள்ளது.
![]()
|
பெங்களூருக்கு வெளியே ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் செயல் திட்டத்தில் கிராமப்புற கண்டுபிடிப்பு மையங்கள், கல்லூரிகள் தோறும் புதுமை ஆய்வகங்கள் அல்லது மையங்கள், ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்கும் பிரத்யேக ஆராய்ச்சி மையம் மற்றும் ஊக்கத்தொகை ஆகிய வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், மங்களூரு, உடுப்பி, மணிப்பால், ஹூப்பளி, பெலகாவி மற்றும் தார்வாட் ஆகிய இடங்களில் 400,000 சதுர அடி பரப்பளவில் தொழில்நுட்பக் குழுக்களுக்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆக்சலரேட்டர் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, மைசூர், மங்களூரு மற்றும் ஹுப்பளி - தார்வாட் ஆகிய 3 இடங்களில் அமைக்கப்படுகின்றன.