எங்களுக்கும் பஞ்சமி நிலம் சொந்தம் : ஒட்டர்கள் கருத்து | எங்களுக்கும் பஞ்சமி நிலம் சொந்தம் : ஒட்டர்கள் கருத்து | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் பஞ்சமி நிலம் சொந்தம் : ஒட்டர்கள் கருத்து

Added : அக் 06, 2011
Share
தமிழகத்தில், பஞ்சமி நிலம் வழங்கப்பட்டவர்களில், ஒட்டர் சமூகத்தினர், பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.,) என்ற பிரிவில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அவர்களது நில உரிமை கேள்விக்குறியாகியுள்ளது ஒட்டர்கள் நிலை. இது குறித்து, ஒட்டர் சமூக நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒட்டர், வேட்டைக்காரர், குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட ஜாதியினருக்கும், பஞ்சமி நிலங்கள்

தமிழகத்தில், பஞ்சமி நிலம் வழங்கப்பட்டவர்களில், ஒட்டர் சமூகத்தினர், பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.,) என்ற பிரிவில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அவர்களது நில உரிமை கேள்விக்குறியாகியுள்ளது ஒட்டர்கள் நிலை.

இது குறித்து, ஒட்டர் சமூக நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒட்டர், வேட்டைக்காரர், குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட ஜாதியினருக்கும், பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை, வருவாய்த்துறை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. ஆனால், காலப்போக்கில், பட்டியல் இனத்தவரிடம் இருந்த பஞ்சமி நிலங்கள், பிற சமூகத்தினருக்கு சென்றது போல, இவர்களிடமிருந்தும், நிலம் பறிபோயுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின், 1957ல் வெளியிடப்பட்ட அரசாணையில், ஒட்டர் உள்ளிட்ட சில ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போதும், இந்த ஜாதியினர் எம்.பி.சி., எனப்படும், மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், தங்களது பஞ்சமி நில உரிமைகளை, இந்த சமூகத்தினர் மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு போராட்டத்தில் வேறுபாடு இல்லை : இது குறித்து, பஞ்சமி நில மீட்புப் படையின் மாநில தலைவர் கல்யாண சுந்தரம் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், யார் யாருக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டதோ, அவர்கள் அனைவருக்கும், அந்த நிலம் மீண்டும் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவை, முழுமையாக அமலாக்க வேண்டும். இந்த நிலம் பெற்ற சமூகங்கள், தற்போது எந்த பட்டியலில் உள்ளனர் என்பதை வைத்து, அவர்களது நில உரிமையை தடுக்கக்கூடாது. இவ்வாறு கல்யாண சுந்தரம் கூறினார்.

வரலாறு என்ன சொல்கிறது? : கடந்த, 1901ம் ஆண்டு சென்னை மாநில கணக்கெடுப்பில், ஒட்டர்கள் உள்ளிட்ட ஜாதியினர் பற்றியும், அவர்களின் சமூக நிலை குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில், "இங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் தனித்தனி குழுக்களாக, 4.98 லட்சம் பேர், ஒட்டர் இனத்தில் இருந்தனர்' என்றும், அந்த கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், இவர்களது எண்ணிக்கை அதிகளவில் இருந்ததும், அந்த அறிக்கை மூலம் தெரிய வருகிறது. தமிழகம் முழுவதும், 62 ஆயிரத்து, 745 பேருக்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டதாக, நில நிர்வாகத்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 19 ஆயிரத்து, 923 நபர்களுக்கு இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தற்போது, 30 சதவீத நிலங்கள், பிற சமூகத்தினர் வசம் உள்ளதாக, அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆவணங்களில் குழப்பம் : திருவண்ணாமலை, வேலூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், பெரம்பலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், ஒட்டர்களுக்கும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டதாக இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அதே சமயம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர்கள் பெயர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது குறித்து வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதில், பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது மற்றும் தற்போது அதை பயன்படுத்தி வருபவர்கள் பட்டியல் குறித்து, வருவாய்த்துறை ஆவணங்களில், சில இடங்களில், ஒட்டர்கள், எஸ்.சி., எனவும், சில இடங்களில், எம்.பி.சி., எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பம் காரணமாக, இவர்களுக்கான பஞ்சமி நில மீட்பு நடவடிக்கைகள் மேலும் சிக்கலாகியுள்ளது.

பஞ்சமி நிலம் என்றால் என்ன? : அடிமை முறை மற்றும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு நில உரிமையை உறுதி செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை பட்டியல் இனத்தவர் என வகைப்படுத்தி, அவர்களுக்கு, 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்த சட்டம், 1892, செப்., 30ல், இங்கிலாந்து பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலங்கள், எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கு என பிரிவு பார்க்காமல், பட்டியல் இனத்தவருக்கு பிரித்து ஒதுக்கப்பட்டன. இதற்கு, அப்போது எடுக்கப்பட்ட ஜாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படை தகவல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது, இது தொடர்பான விவரங்கள், வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவு செய்யும் போது, பஞ்சமி நிலம் என்றும், டி.சி., நிலம் என்றும், கன்டிஷன் நிலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, இவ்வாறே வருவாய் ஆவணங்களில் இந்த நிலங்கள் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

நிலம் பெற்ற சமூகங்கள் : காலப் போக்கில், பஞ்சமி நிலம் பெற்றவர்கள் குறித்து சில தவறான கருத்துகள் பரவின. உதாரணமாக, தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள அனைத்து சமூகங்களும் பஞ்சமி நிலங்கள் பெற்றவர்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில சமூகங்கள் மட்டுமே, கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகள் பரவின. இதன் விளைவாக, குறிப்பிட்ட சில சமூகங்கள், தங்களது பஞ்சமி நில உரிமையை இழக்கும் நிலை உருவானது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X