சூளைமேடு, சூளைமேடு பகுதி கில் நகர் பூங்காவில், பழுது பார்த்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பூங்காவின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சூளைமேடு பகுதியில், கில் நகர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என, நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பூங்காவில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான உடற்பயிற்சி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த பூங்காவில், புனரமைப்பு மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இங்குள்ள, பழுதான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
அதேபோல, குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், தனித்தனியாக ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும், பூங்காவை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, பூங்காவில் பழுது பார்த்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பூங்காவின் நடைபாதையை சரி செய்வதற்கான பணிகள் நடக்க உள்ளன.
இங்கு, அழகிய நீரூற்றுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவை பசுமையாக்குவதற்காக, கூடுதலாக பல்வேறு தாவர வகைகள் நடப்பட உள்ளன.
பூங்காவை புனரமைத்து பொலிவுற செய்வதற்கான பணி, இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இதற்கான, நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.