திருச்சி : திருச்சியில் அரசு விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் நேருவுக்கு, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியதால், இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எம்.பி., வீட்டிற்குள் நுழைந்து, கார், பைக், ஜன்னல் கண்ணாடியை, அமைச்சர் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். கைதாகி காவல் நிலையத்தில் இருந்த எம்.பி., ஆதரவாளர்களைத் தாக்கியதோடு, காவல் நிலையத்தையும், பெண் போலீஸ் ஒருவரையும் தாக்கி, அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின், நேருவை கடிந்து கொண்டார்; தாக்குதலை தலைமை ஏற்று நடத்திய நான்கு பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
திருச்சி, நியூ ராஜா காலனியில், தி.மு.க., - எம்.பி., சிவா வீடு உள்ளது. இதன் அருகே, எஸ்.பி.ஐ., காலனியில், 'நமக்கு நாமே' திட்டத்தில், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.
![]()
|
அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழா அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில், எம்.பி., சிவா பெயர் இல்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
நேற்று காலை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க., முதன்மை செயலருமான நேரு, உள் அரங்கம் திறப்பு விழாவுக்கு, சிவா வீடு வழியாகச் சென்றார்.அப்போது, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் தலைமையில், எம்.பி., வீட்டு முன் நின்றிருந்த எம்.பி., ஆதரவாளர்கள், அமைச்சருக்கு கறுப்புக் கொடி காட்டினர்.
'அர்ச்சனை'
ஆவேசமடைந்த அமைச்சர், கறுப்புக் கொடி காட்டியவர்களையும், எம்.பி.,யையும் தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். பின், உள் அரங்கம் திறப்பு விழா நடந்து முடிந்தது.
விழா முடிந்து நேரு புறப்படும் முன்,அவருடன் வந்த ஆதரவாளர்கள், ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்டோர், கையில் சவுக்கு கட்டை, கற்களுடன், எம்.பி., சிவா வீட்டுக்குள் புகுந்தனர்.அங்கு நிறுத்தப்பட்டிருந்த எம்.பி.,யின் சொகுசு கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். சோடா பாட்டில்கள், கற்களை வீசி, இரு 'பைக்'குகள், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கினர். அதுவரை வேடிக்கை பார்த்த போலீசார், அவர்கள் எம்.பி., வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
எம்.பி., ஆதரவாளர்கள் கைது
தாக்குதல் சம்பவம் முடிந்ததும், எம்.பி., வீட்டுக்கு திருச்சி நீதிமன்ற போலீசார் வந்தனர்.
வீட்டுக்குள் இருந்த எம்.பி., சிவா ஆதரவாளர்கள் சிலரை, அமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்டியதாக கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான, திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், விஜய் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.
அங்கு பணியில் இருந்த சாந்தி என்ற பெண் போலீசை தாக்கி, அங்கிருந்த நாற்காலிகளைத் துாக்கி, எம்.பி., ஆதரவாளர்களை மீண்டும் தாக்கினர். பெண் போலீஸ், 'மைக்'கில் மற்ற போலீசாரை அங்கு வரவழைத்தார். அவர்கள், அமைச்சர் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு, துணை கமிஷனர்கள் வந்து, தாக்குதலில் காயமடைந்த பெண் போலீஸ் சாந்தியை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், எம்.பி., சிவா வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மீண்டும் அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களை, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த எம்.பி., ஆதரவாளர் சண்முகம், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிது நேரத்தில் தி.மு.க.,வினர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை, துணை கமிஷனர் அன்பு, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.இரு தரப்பினரும் பரஸ்பரம், போலீசாரிடம் புகார் எழுதிக் கொடுத்துள்ளனர்.
எம்.பி., சிவா, அரசு முறை பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அவரது வீடு தாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கூறுகையில், 'அமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்டியதை தட்டிக் கேட்க சென்ற எங்களை, அவர்கள் தாக்கினர். நாங்களும் பதிலுக்கு தாக்கினோம்' என்றனர்.
திருச்சி தி.மு.க.,வில் உள்ள கோஷ்டி பூசலை, இந்த மோதல் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், சொந்த கட்சியின் மூத்த எம்.பி.,யான சிவா வீடு, கார், டூ வீலர்களை அடித்து நொறுக்கியதோடு, போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, பெண் போலீசையும் தாக்கி உள்ளனர்.தி.மு.க.,வினரின் இந்த அராஜக செயல், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'என் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்?'
திருச்சியில் நடந்த தி.மு.க., கோஷ்டி மோதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், அமைச்சர் நேருவை தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் கோபமாக பேசியுள்ளார். 'என் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்?' என, அவரிடம் சீறியுள்ளார்.
அதற்கு நேரு, 'இதுக்கு காரணமானவங்களை கூப்பிட்டு சத்தம் போட்டு விட்டேன். எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, திருச்சி தி.மு.க., நிர்வாகிகள், நான்கு பேரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பொதுச்செயலர் துரைமுருகன் அறிவிப்பு:
திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலர் முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், வட்டச் செயலர் ராமதாஸ் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேரு 'எஸ்கேப்!'
கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தஞ்சாவூர் வந்த அமைச்சர் நேருவிடம், எம்.பி., சிவா வீட்டின் மீது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அமைச்சர் நேரு, பேட்டி அளிக்க முயன்ற போது, அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவர் சத்தம் போட்டார்; அதனால், எந்த பதிலும் அளிக்காமல் நேரு, 'எஸ்கேப்' ஆனார்.
அப்போது, நேரு அருகே நின்றிருந்த திருவையாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகரன், பின்னால் நின்றிருந்த தொண்டரை கையால் தாக்கி, முகத்தில் குத்த முயன்றார்; அந்த நபரை ஒருமையிலும் திட்டினார்.நேரு பதில் ஏதும் சொல்லாமல், கிளம்பிச் சென்றதால், பிரச்னை பெரிதாகவில்லை.
இது குறித்து, எம்.பி., சிவாவின் மருமகன் முத்துக்குமார் அளித்த பேட்டி:உள்ளூர் எம்.பி.,யை, அமைச்சர் நேருவும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அவர் வீட்டின் அருகே நடக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் கூட, அவர் பெயரை போடாமல் அவமானப்படுத்துகின்றனர். தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி, சிறந்த எம்.பி., என்று பெயரெடுத்தவரை, கட்சியின் மூத்த நிர்வாகியும், உள்ளூர் அமைச்சருமான நேருவும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. நேருவின் ஆதரவாளர்கள், தொடர்ந்து இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.