எழுத்தாளர் சிவசங்கரி, 140 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர். தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி, தக்க வைத்து இருப்பவர். இவருடைய 'மேக்னம் ஓபஸ்' என்பது, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற நான்கு தொகுதிகள். 1998 முதல் 2009 வரை பல்வேறு ஆண்டுகளில் வெளியான தொகுதிகள், வரும் 18ல், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஆதரவோடு, மறு வெளியீடு காணவிருக்கிறது. இந்த ஆண்டு 80 வயதை நிறைவு செய்யும் தமிழின் மூத்த எழுத்தாளர், நம் மாணவர் பதிப்பு ஆசிரியர் 'பட்டம்' ஆர்.வெங்கடேஷுக்கு அளித்த பேட்டி இதோ:
*தொடர்ச்சியாக நிறைய நாவல்களையும், தொடர்கதைகளையும் எழுதிக் கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு திட்டத்துக்குள் வந்தீர்கள். அதற்கான பின்னணி என்ன? தேவை, நோக்கம் என்ன?
எழுத்துலகத்தில் 25 வருஷங்கள் முடித்த பிறகு, இவ்வளவு துாரம் கவுரவம் கொடுத்த, அங்கீகாரம் கொடுத்த இலக்கியத்துக்கு, நான் இன்னும் ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும்.
சிறுகதை, நாவல், பயணக் கதை, கட்டுரைகள், வாழ்க்கைத் தொடர்கள், முன்னேற்றத் தொடர்கள் எல்லாவற்றையும் எழுதிவிட்டேன். ஆனால், அது எனக்குப் போதவில்லை. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும், அது நம் நாட்டுக்கானதாகவும் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
கடந்த 1992ல் அமெரிக்க கவுன்சில் அமைப்பினர், மைசூரில் ஒரு பட்டறை ஏற்பாடு செய்தனர். அதில், பல மொழி எழுத்தாளர்களையும் கூப்பிட்டு இருந்தனர்; மூன்று நாட்கள் நடைபெற்றது.
கறுப்பினத்தைச் சார்ந்த ஒரு பெண் எழுதிய புத்தகத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசிவிட்டு, மிகவும் திருப்தியுடன், நான் மைசூரில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டு இருந்தேன்.
அப்போது எனக்குள் ஒரு கேள்வி வந்தது. இப்படி இந்திய எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால், அங்கே அமெரிக்க, ஆங்கில, பிரெஞ்சு இலக்கியங்களைப் பற்றி கலந்துரையாட முடிகிறது; ஆனால், நம் இந்திய இலக்கியங்களை ஏன் இப்படி விவாதிக்க முடிவதில்லை? அதற்குக் காரணம், மொழிபெயர்ப்புகள் இல்லை. நமக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமில்லை என்பது புரிந்தது.
இது நடந்த இரண்டு வாரத்திற்கெல்லாம், சாகித்ய அகாடமி, சிக்கிம் மாநிலத்தில் நடந்த கிழக்கு இந்தியா இலக்கிய விழாவுக்கு மேற்பார்வையாளராக அழைத்து இருந்தது. அங்கே போன போது, மகாஸ்வேதா தேவியில் இருந்து எண்ணற்ற எழுத்தாளர்களை அறிமுகம் செய்து கொண்டேன்.
ஆனால், அங்கேயும் சென்னை என்றால், அவர்களுக்கு காஞ்சிபுரம் புடவை தெரிகிறது; இட்லி சாம்பார் தெரிகிறது; அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை.
'என்ன இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே...' என்று எனக்கு முதலில் கோபம் தான் ஏற்பட்டது. 'நமக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்?' என்ற எண்ணம் அதன் பின்னர் ஏற்பட்டது.
கோல்கட்டா என்றால் ரசகுல்லா தெரிகிறது; ஒருசில பேருக்கு வேண்டுமானால் ரவீந்திரநாத் தாகூர் தெரியும்.
![]()
|
அதனால், நம் இந்தியர்களுக்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உண்மை புரிந்தது. அதற்கு இலக்கியத்தை ஒரு வாகனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
அப்போது, இந்திய அரசியல் சாசனத்தில் எட்டாவது பிரிவில், 18 மொழிகள் இருந்தன. இவை அனைத்தையும் கொண்ட ஒரே புத்தகமாகக் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு திசையையும் எடுத்துக்கொண்டு, அந்தந்த திசையில் இருக்கும் மொழிகளையும், அதன் எழுத்தாளர்களையும் கொண்டு வரலாம் என்று தீர்மானித்தேன்.
தெற்கில் நான்கு, கிழக்கில் ஐந்து, மேற்கில் நான்கு, வடக்கில் ஐந்து மொழிகள் என்று என் வசதிக்கு ஏற்ப இந்திய மொழிகளைப் பிரித்துக்கொண்டேன். அதன் பிறகு செயலில் இறங்கினேன்.
* எப்படி இதற்கான படைப்பாளிகளை தேர்வு செய்தீர்கள்?
இன்றைக்கு 'கூகுள்' ஆச்சாரியாளிடம், மணிப்பூரியிலோ, அஸ்ஸாமிய மொழியிலோ முன்னணி எழுத்தாளர் யார் என்று கேட்டால், அது உடனே 50 எழுத்தாளர்களைக் கொடுத்துவிடும். அன்றைக்கோ தொலைதொடர்பு முன்னேறாத காலம்.
அதனால், அந்தந்த மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் கடிதம் போட்டேன்.
அதில், 'உங்கள் மொழியில் இருக்கும் 10 சிறந்த படைப்பாளிகளை இனம் காட்டுங்கள்' என்று கேட்டுக்கொண்டேன். இரண்டு மாதத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நான்கைந்து கடிதங்கள் வந்தன.
அவர்கள் கொடுத்த 10 பேர் கொண்ட பட்டியலில் பொதுவாக இருக்கும் நான்கு அல்லது ஐந்து எழுத்தாளர்களை மட்டும் எடுத்துக் கொண்டேன்.
மேலும், அவர்கள் எல்லாரும் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் ஓர் அடிப்படையாக வைத்துக் கொண்டேன். பெண்கள் இருக்க வேண்டும், தலித் எழுத்துக்களைப் பற்றியும் பேச வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
இப்படித் தான் நான் எழுத்தாளர்களை தேர்வு செய்தேன். என்னுடைய எழுத்தாளர் தேர்வு தவறு என்று, யாரும் இதுவரை சொல்லவில்லை. நீங்கள் ஒருசிலரை விட்டுவிட்டீர்களே, இன்னும் சிலரைச் சேர்த்திருக்கலாமே என்று தான் கேட்டனர்.
பேட்டி எடுக்கப் போவதற்கு முன், என்னவிதமான 'ஹோம் ஒர்க்' செய்தீர்கள்?
அப்போதெல்லாம் நுாலகம் நுாலகமாகப் போய் உட்கார்ந்திருப்பேன். அந்தந்த எழுத்தாளர்களைப் பற்றி, அந்த மொழிகளைப் பற்றி இருக்கும் தடிதடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து 'நோட்ஸ்' எடுப்பேன்.
காலேஜில் படிப்புக்காக நோட்ஸ் எடுத்தேனோ இல்லையோ, இதற்காக மாதக்கணக்கில் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.
ஒரு எழுத்தாளரைச் சந்திக்கப் போவதற்கு முன், அவருடைய படைப்புகளில் எவையெல்லாம் ஆங்கிலத்தில் கிடைக்கிறதோ, அவற்றையெல்லாம் படித்து புரிந்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டு தான் போவேன். இரண்டு, மூன்று எழுத்தாளர்கள் என் உழைப்பை அப்படி மெச்சினர்.
* பிற மொழி எழுத்தாளர்கள் உங்களை எப்படி எதிர்கொண்டனர்? உங்கள் முயற்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டனரா?
என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பைத் தான் பிற மொழி எழுத்தாளர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் ஏதோ ஆராய்ச்சி மாணவி ஒருவர் வரப்போகிறார் என்று தான் நினைத்தனர்.'நீங்க ஏதோ லெட்டர் போட்டீங்க. நீங்கள் எங்க மணிப்பூர் வரப் போறீங்க? நீங்க எங்க காஷ்மீர் வரப் போறீங்கன்னு நினைச்சோம்' என்று பல எழுத்தாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மேலும் இந்திய இலக்கியத்தில் இப்படிப்பட்ட ஒரு முயற்சி நடந்ததே இல்லை. அதை நீங்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறீர்கள் என்று மனம் திறந்து பாராட்டினர்.
பஞ்சாபில் இருந்து ஞானபீட விருது பெற்ற குருதயாள் சிங், எனக்கு கடிதம் போட்டார். அவர் என்னுடைய தெற்கு திசை புத்தகத்தைப் பற்றி ஆங்கில நாளிதழ்களில் வந்த விமர்சனங்களைப் பார்த்துவிட்டு, எழுதினார்.
'இது கற்பனை கூட செய்யமுடியாத அரிய முயற்சி. உங்களுக்கு நான் எந்தவிதத்தில் எல்லாம் உதவ வேண்டுமோ, அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று எழுதினார்.
இதேபோன்று என்னை தொடர்பு கொண்ட இன்னொரு கவிஞர் குல்சார். அவரை எல்லாருக்கும் சினிமா பாடல் ஆசிரியராகத் தான் தெரியும். ஆனால், அவர் மிகச் சிறந்த கவிஞர், உருது சிறுகதை எழுத்தாளர்.
அவர் ஒருமுறை ஒரு விமான நிலையத்தில், இந்த தெற்கு தொகுதியைப் பார்த்திருக்கிறார். அந்தப் புத்தகம் அவரைக் கவர்ந்தது. அதை வாங்கிப் படித்தார். அதில், தெற்கில் எம்.டி., வாசுதேவன் நாயர் பற்றிய அறிமுகம் இருந்தது. எம்.டி, குல்சாருக்கு நண்பர். இதைப் படித்துவிட்டு, 'ஆஹாஹா' என்று பாராட்டி, குல்சார், எம்.டி.,க்கு கடிதம் போட்டார்.
'யார் இந்த சிவசங்கரி? அவருக்கு என் பாராட்டைத் தெரிவியுங்கள்' என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை, எம்.டி., எனக்கு அனுப்பிவைத்தார். மகுடம் வைத்தார் போன்ற சந்தோஷம் ஏற்பட்டது.
உருது மொழிக்காக குல்சாரையே நான் பேட்டி கண்டபோது, நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
இந்தியர்களை, இந்தியர்களுக்கு அறிமுகம் செய்வது தான் என் குறிக்கோள். ஒரு படைப்பைப் படித்துவிட்டு, அவருடைய இதர படைப்புகளையும் தேடிக்கொண்டு போய் படித்தனர் என்றால், அது தான் என்னுடைய வெற்றி.
பிற மொழி எழுத்தாளர்களிடம் இருந்து என்ன விஷயத்தை அல்லது அம்சத்தை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தீர்கள்? அது முடிந்ததா?
ஒரு மாநிலத்தை அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். முதலில் எந்த மாநிலத்தைப் பற்றி எழுதுகிறேனோ, அந்த மாநிலத்தில் முழுமையாக பயணம் செய்துவிடுவேன். அதை வைத்து பயணக் கதை எழுதிவிடுவேன்.
குதிரைக்கு கேரட் மாதிரி பயணக் கதை இருக்கும். அதைப் படித்துவிட்டு, வாசகர்கள் உள்ளே வந்துவிடுவர். அதன் பிறகு அந்த மொழி எழுத்தாளரோடு மிக விரிவான பேட்டி.
அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து, பொதுப்படையான அனைத்து விஷயங்களைப் பற்றியும் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை பேட்டியில் பதிவு செய்வேன்.
அவர்களுடைய கண் வழியாக அந்தப் பிரதேசத்தை, அந்த மொழியை, அந்த மாநிலத்தை என்னால் பார்க்க முடிந்தது. இதற்கு அடுத்த பகுதியில், அந்த எழுத்தாளருடைய ஒரு சிறுகதையோ, ஒரு கவிதையோ, நாவல் என்றால் அதில் ஒரு அத்தியாயமோ, மொழிபெயர்த்து சேர்த்துக்கொள்வேன்.
கடைசியாக, அந்த மொழி சேர்ந்த ஒரு அறிஞருடைய சுருக்கமான கட்டுரையைச் சேர்ப்பேன். அதில், அந்த மொழியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இடம்பெற்று இருக்கும்.
* அவர்கள் பெரும்பாலும் என்ன விஷயங்களை தங்கள் படைப்புகளில் தொட்டனர்? எதை மையப்படுத்தினர்?
தமிழைத் தவிர, எல்லா இந்திய மொழிகளில் எழுதப்பட்ட மிகப் பெரிய படைப்பு என்றால் அது மகாபாரதமும், ராமாயணமும் தான்.
நமக்கு சங்க கால இலக்கியம் எல்லாம் இருப்பதால், வித்தியாசமாக இருக்கிறோம். எல்லா எழுத்தாளர்களுக்குமே சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தது. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய கதைகள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
வருத்தமான ஒற்றுமை ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், சிந்தி, பஞ்சாபி, உருது, காஷ்மீரி பண்டிட்கள் ஆகியோருக்கு, இந்தியப் பிரிவினையின் போது வீடு, வாசல் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, ராவோடு ராவாக ஓடிப் போக வேண்டிய அந்த அவலம், அந்த வருத்தம், பலரது சிறுகதைகள், நாவல்களில் பதிவாகியிருக்கின்றன.
அந்த வருத்தம், நம்ம தென்னக மக்களுக்குத் தெரியவே தெரியாது. நமக்கு அந்த மாதிரியான பாதிப்பு இருந்ததே கிடையாது.
இதேபோல, தமக்கு என்று ஒரு மாநிலம் இல்லை என்ற ஏக்கம் பலருக்கு இருக்கிறது. தமிழர்களாகிய நமக்கு இருப்பதின் அருமை தெரியவே தெரியாது, 'வீ டேக் இட் பார் கிராண்டட்!' இல்லாத போது தான் தெரியும் என்பார்கள். இந்தியன் நேபாளி, சிந்தி, உருது ஆகியோருக்கு தனிப்பட்ட மாநிலம் கிடையாது.
கொங்கிணிக்கு இல்லாமல் இருந்தது, இப்போது கோவா வந்துவிட்டது. அவர்கள் எல்லாருமே, எங்களுக்கு என்று ஒரு மாநிலம் இருந்தால் தானே, எங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல முடியும், சாதிக்க முடியும் என்ற குறை உண்டு.
* நீங்கள் பார்த்தவரை அவர்களுடைய ஆதங்கங்கள் என்ன?
எல்லா மொழிகளிலும் இளைய தலைமுறை பற்றி கவலைப்படுகின்றனர். நாட்டில் ஏற்படும் சீரழிவுகள், லஞ்ச லாவண்யம், பாலியல் கொடுமைகள் பற்றி கவலைப்படுகின்றனர். எல்லா மொழிகளிலுமே எல்லா எழுத்தாளர்களுக்குமே அந்த வருத்தங்கள், பாதிப்புகள், கோபங்கள் இருக்கின்றன.
* தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் இந்தப் பணிக்கே செலவிட்டுள்ளீர்கள். நடுவில் சோர்வு தட்டவில்லையா?
தெற்கு தொகுதி செய்யும் போது இந்த சிரமம் தெரியவில்லை. தெற்கு தொகுதிக்கான பேட்டிகளை முடித்து, டிரான்ஸ்கிரைப் செய்து, எடிட் செய்ய வேண்டிய சமயம் வரும்போது, கிழக்கு திசை மொழிகளைப் பற்றிய ஆரம்ப கட்ட வேலைகளைத் துவங்கினேன்.
தெற்கு புத்தகத்தை அச்சுக்குக் கொடுத்துவிட்டு, கிழக்கு பகுதியில் களப்பணியைத் துவங்கியபோது, மூன்றாவது தொகுதியான மேற்கு பகுதியில் ஆரம்பக் கட்டப் பணியை ஆரம்பித்தேன்.
பல்வேறு தளங்களில் வேலை செய்தபோது, இது பல ஆண்டுகளுக்கு நீடித்தது. ரொம்பவும் கஷ்டப்பட்டேன். லலிதா என்ற என் உதவியாளர் இல்லையென்றால், இதையெல்லாம் என்னால் செய்திருக்கவே முடியாது.
* எது முதலில் வெளியான தொகுதி?
முதலில் வெளியான தொகுதி தெற்கு, அடுத்து கிழக்கு, மூன்றாவது மேற்கு, கடைசியாக வடக்கு. இதில், நான்கு தொகுதிகளுமே தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே வெளியானது.நான் எப்போதும் தமிழ் பதிப்பில் தான் கவனம் செலுத்துவேன். எல்லா மாநிலங்களுக்கும் இந்த முயற்சி போய் சேர வேண்டும் என்பதற்காக இவற்றை ஆங்கிலத்திலும் கொண்டுவந்தேன். நான் தமிழ் எழுத்தாளர், இதை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்ப்பது தான் என் குறிக்கோளாக இருந்தது.
* அந்தந்த மொழியில் கலாசார அம்சங்களை உங்களால் கொண்டு வர முடிந்ததா?
அதற்குத் தான் நான் ஒவ்வொரு மாநிலத்திலும் விரிவாக பயணம் மேற்கொண்டேன். அதன் மூலம், அந்த மக்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பேச்சு, பண்டிகைகள், இதர விஷயங்களை எல்லாம் கூர்ந்து கவனித்து தெரிந்துகொண்டேன். நான் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று பயணக் கதை எழுதியிருப்பதால், அந்த அனுபவம் கைகொடுத்தது.
மேலும், 15 நாட்கள் ஒரே பகுதியில் இருந்து, பல்வேறு எழுத்தாளர்களின் வீடுகளில் தங்கியதால், அங்கேயே சாப்பிட்டு, அவர்கள் வீட்டு மனிதர்களோடு பேசி, பழகும் போது, அந்தந்த பகுதிகளில் கலாசார அம்சங்களை புரிந்துகொள்ள முடிந்தது. அதை எழுத்தில் கொண்டுவர முடிந்தது.
* புத்தகங்கள் வெளியான பின், தமிழ் மற்றும் ஆங்கில வாசகர்களிடையே என்னவிதமான வரவேற்பு கிடைத்தது?
இதில் எனக்கு ஏமாற்றம் மட்டுமே ஏற்பட்டது என்று தான் சொல்லவேண்டும். பார்த்தவர்கள் எல்லாரும் 'ஆஹா, ஓஹோ' என்று சொன்னார்களே தவிர, அடுத்த அடியை யாருமே எடுத்து வைக்கவில்லை.நான்கு தொகுதிகளும் சேர்த்து 2,700 ரூபாய் ஆகும். வாசகர்கள் வாங்குவது சிரமம், அதனால், ஒரு அரசாங்கம் வாங்கி இதைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ஒன்றிரண்டு நல்லிதயங்கள் படைத்தவர்கள் மட்டும், வாங்கி ஆதரவு தெரிவித்தனர்.
உதாரணமாக, ஜி.கே.மூப்பனார், தெற்கு தொகுதி வெளியீட்டு விழாவை காமராஜர் அரங்கில் நடத்தினார். முன்னுாறு பள்ளிகளை வரவழைத்து, அந்தப் பள்ளிகளில் நுாலகங்களுக்கு 300 செட் புத்தகங்களை அவர் கொடுத்தார்.அதேபோல் சிங்கப்பூரில் இருந்த ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், என்னுடைய மேற்கு தொகுதி வெளியானபோது, ஒரு கூட்டத்தில் என்னைச் சந்தித்தார்.
அவர் அந்தக் காலத்திலேயே 3 லட்சம் ரூபாய் அனுப்பிவைத்து, எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு இந்தத் தொகுதிகளை அனுப்பிவைக்க முடியுமோ அனுப்பிவையுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றபடி அரசாங்கம் எல்லாம் ஒன்றுமே செய்யவில்லை. அதற்கு மேல் நான் போய் யாரையும் கேட்பதாகவும் இல்லை. நான் இதுவரை 140 புத்தகங்கள் போட்டிருக்கிறேன். இதற்காக யாரையாவது போய் கேட்க முடியுமா என்ன?என்னுடைய மற்ற புத்தகங்களுக்குச் செய்யாத ஒரு விஷயத்தை இதற்கு செய்தேன், அதுவும் வருத்தத்தோடு செய்தேன். இந்தப் புத்தகங்களுக்கு நான் பணம் கொடுத்து தான் பப்ளிஷ் செய்தேன்.
ஆங்கிலத்தில் முதன்முதலாக வெளியிட்டவர்களாக இருக்கட்டும், தமிழில் முதன்முதலாக வெளியிட்டவர்களாக இருக்கட்டும், 'இதெல்லாம் எங்கம்மா விற்கும்' என்று தான் கேட்டனர். அதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் 2 லட்சம், 3 லட்சம் கொடுத்துத் தான் வெளியிட்டேன். அது எனக்கு கஷ்டமான விஷயம் தான்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பணியைச் செய்கிறாய், தலை எழுத்தா என்று நிறைய பேர் என்னை கேட்டனர். 16 ஆண்டுகள் என் வருமானத்தை விட்டுவிட்டு, என் பெயர், புகழ் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த வேலையை மட்டுமே செய்திருக்கிறேன். அதற்கு நான் கொடுத்த பதில் இதுதான்: இதை நான் என் நாட்டுக்காகச் செய்கிறேன்; என்னை ஆளாக்கிய இலக்கியத்துக்காகச் செய்கிறேன்.
தவிரவும் எனக்கு நான்கு குழந்தைகள் இருந்து, நான்கு குழந்தைகளுமே 'போஸ்ட் டாக்டரேட்' செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர்களை நான் கஷ்டப்பட்டாவது படிக்க வைப்பேன் இல்லையா? என்னுடைய நான்கு தொகுதிகளும் என் நான்கு குழந்தைகள் மாதிரி என்று பதில் சொல்வேன்.
* மீண்டும் இப்படி ஒரு பயணம் அமைந்தால், பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவீர்களா?
இப்போது எனக்கு 80 வயது. அதனால் என் உடம்புக்கு முன்பு மாதிரி தெம்பு கிடையாது. அப்போது மனதில் இருந்த வேகம், வயது எல்லாமே வேறு. மறுபடியும் என்னால் இப்படிப் பயணம் போக முடியாது. வேறு யாராவது எடுத்துச் செய்யட்டுமே!