வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' என்றான் பாரதி. இந்தியராகிய நமக்குள், ஜாதி, மதம், இனம், மொழி என்று எத்தனையோ வேற்றுமைகள். ஆனாலும், அந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் பண்பாடு; அதுவே, ஜனநாயகத்தின் ஒரு அம்சம். நம் நாட்டில் வாரிசு அரசியலை துவக்கி வைத்து, ஜனநாயகத்திற்கு சாவுமணி அடித்தது, நேரு குடும்பம். அதன்பின், பல மாநிலங்களிலும் வாரிசுகளின் ராஜ்ஜியம் தான்.
நாட்டில் ஜனநாயகம் சாவதற்கு காரணமானது காங்கிரஸ். அந்தக் கட்சியைச் சேர்ந்த ராகுல், வெட்கமில்லாமல், தன்னிலை மறந்து, வந்த வழி நினைவின்றி, வெளிநாட்டில் போய், 'இந்தியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டது' என்று பேசிவிட்டு வந்துள்ளார். இது, மல்லாக்கப் படுத்து, எச்சில் உமிழ்வது போன்றது.
பிரிட்டனில் ராகுலை பேசச் சொன்ன தலைப்பு, 'ஜனநாயகம்' அதைப்பற்றி பொதுப்படையாக, எத்தனையோ கருத்துகள் கூறலாம். இருந்தும், இந்த மகானுபாவர், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன் தாயகத்தின் மீதே சேற்றை வாரி வீசியது வேதனையானது.
![]()
|
'ஜனநாயகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., வாயிலாக தீங்கு விளைந்துள்ளது' என்று கூறியுள்ளார் ராகுல். ஒரு தொண்டு அமைப்பு, நாட்டுக்கு தீமை செய்துள்ளது என்பது அவரது வாதம் என்றால், இவரும், இவர் சார்ந்த காங்., கட்சியும், பல காலம் நாட்டை ஆண்ட போது, தேனாறும், பாலாறுமா ஓடியது... அப்படி இவர்கள் செய்த நன்மைகள் என்ன... விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டர் முதல், மண்ணில் விளையும் நிலக்கரி வரை, காங்., ஆட்சியில் செய்த ஊழலுக்கு பெயர் என்னவோ?
ஒவ்வொரு மாநிலத்திலும், இரட்டை வேடம் போடும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக அவர்களுக்கு பல்லக்கு துாக்கும், காங்கிரஸ் கட்சியினர் தான், ஜனநாயகத்தை மட்டுமின்றி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தங்கள் கட்சியின் பெருமையையும் குழி தோண்டி புதைத்து விட்டனர் என்றால், அது மிகையில்லை. காங்கிரசார் முதுகில் இத்தனை அழுக்கு இருக்கும் போது, வெளிநாட்டில் போய், தாய்நாட்டை பற்றி அவதுாறாகப் பேசுவது தர்மமா?
பேச்சு என்பது ஒரு கலை; அளவோடு, சுருக்கமாக, தேவையானதை மட்டும், சொற்பொழிவோடு சபைகளில் பேச வேண்டும். திண்ணைப் பேச்சு வீணர்கள் போல, அண்டை நாட்டில் போய், அன்னை நாட்டை பற்றி கேவலமாகப் பேசுவது படித்தவருக்கு அழகா? ஒருவேளை, ஆட்சி பறிபோன வயிற்றெரிச்சலின் வெளிப்பாடா இது?
ராகுல் அவர்களே... ஜவஹர்லால் நேரு காலத்தில், பார்லிமென்டில் நடந்த சிறப்பான, நாகரிகமான விவாதங்களை படியுங்கள்; எங்கே எதை பேச வேண்டும் என்று, சான்றோரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். 'நேருவின் கொள்ளுப்பேரன்' என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மலிவான அரசியலுக்கு பலியாகாதீர்கள்.