வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை மத்திய சிறை கைதிகளால் நிரம்பி வழிகிறது. நோய் தொற்று, கலவரம் ஏற்படாமல் இருக்க புதிதாக வருவோரை மாவட்ட, கிளை சிறைகளில் அடைக்குமாறு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்லும்போது 'வேற ஜெயில பாருங்க' எனக்கூறி போலீசாரும், கைதிகளும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மதுரை சிறையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 1252. ஆனால் நாளொன்றுக்கு குறைந்தது 40 கைதிகள் 'உள்ளே' வருகின்றனர். நேற்றைய கணக்குபடி 1764 பேர் உள்ளனர்.
இதனால் சிறையில் செயற்கையாக 'கூட்ட நெரிசல்' ஏற்படுவதால் கைதிகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கைதிகள் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் கோடை காலம் என்பதால் சிறைக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கைதிகள் அதிகரிப்பால் தேவையற்ற பிரச்னைகள், கலவரங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க 350 கைதிகள் வரை வேறு சிறைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இதில் சிலர் 'மதுரை சிறையை விட்டு செல்ல மாட்டோம்' என தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் சிறைக்கு வந்த புதிய கைதிகளை வேறு சிறைகளுக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பப்பட்டனர். கிளை சிறைகளுக்கு சென்றபோது, அங்கு 'பாதுகாப்பு' கருதி வேறு சிறைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளனர். இப்படி ஒவ்வொரு சிறையாக போலீசாரும், கைதிகளும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு தேவையற்ற காலவிரையம், மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சிறை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: சிறைக்குள் கலவரம், நோய் தொற்றை தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட, கிளை சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். அந்தந்த மாவட்ட கைதிகளை அங்குள்ள சிறைகளில் அடைத்தாலே இடநெருக்கடி குறையும். ஆனால் வெளிமாவட்ட போலீசார் தங்களுக்கு 'ரிஸ்க்' எனக்கூறி கைதிகளை மதுரை சிறையில் அடைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு கூறினர்.