தொண்டாமுத்துார்: கோவை பாரதியார் பல்கலையில், நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 'பழங்குடி இளையோர் பரிமாற்ற' நிகழ்ச்சி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில், ஆண்டுதோறும் பழங்குடி இளையோர் பரிமாற்றநிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பழங்குடியின மாணவர்கள், பல்வேறு நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, மற்ற மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விளக்கப்படுகிறது.
நடப்பாண்டு, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து, 200 பழங்குடியின இளைஞர்கள், கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் துவக்க விழா, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், பழங்குடி மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஜார்க்கண்ட் மாணவர்களுடன் தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் மனோ தங்கராஜ் இணைந்து நடனமாடினார். கோவை கலெக்டர் கிரந்தி குமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்,ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு கலாசாரம் உள்ளது. அதனை நாம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களின் கலாசாரத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. மாணவர்கள் ஆளுமைப் பண்பு, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நேரு யுவ கேந்திரா சங்கதன் தென்னிந்திய இயக்குனர் நடராஜ், தமிழக இயக்குனர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் லவ்லினா லிட்டில் பிளவர், வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மொழி பெயர்ப்பில் குளறுபடி!
அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழில் பேசியதை மத்திய பாதுகாப்பு படை எஸ்.ஐ., ஒருவர், ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.
அப்போது, அமைச்சர் பேசியதுடன் கூடுதலாக சில விஷயங்களை அவர் சேர்த்துப் பேசுவதாகக் கூறி, மொழிபெயர்ப்பு செய்ய வேண்டாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். இதையடுத்து,அமைச்சர் ஆங்கிலத்தில் பேசினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழில் பேசியதை மத்திய பாதுகாப்பு படை எஸ்.ஐ. ஒருவர், ஹிந்தியில் மொழிபெயர்த்தார். அப்போது, அமைச்சர் பேசியதுடன் கூடுதலாக சில விஷயங்களை அவர் சேர்த்துப் பேசுவதாகக் கூறி, மொழிபெயர்ப்பு செய்ய வேண்டாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். இதையடுத்து, அமைச்சர் ஆங்கிலத்தில் பேசினார்.