கோவை: தி.மு.க.,விடம் நீதியை எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை,'' என, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை பேசினார். அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி மீது வழக்கு பதிந்திருப்பதை கண்டித்து, கோவையில் நேற்று அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதை விட்டு விட்டு, தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறதென்றால், தி.மு.க., அரசு எந்த அளவுக்கு சட்டம் - ஒழுங்கை பராமரிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி,'' என்றார்.
அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை பேசுகையில், ''தி.மு.க.,விடம் நீதி எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை. அவர்கள், காட்டாட்சியே நடத்துவார்கள். பழனிசாமி மீது மட்டுமின்றி, அவரது மெய்காவலர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. போலீசாரை காப்பது எங்கள் பொறுப்பு. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும்; ஆட்சி மாறும். சட்டம் இரு பக்கமும் கூர்மையான ஆயுதம்; அதே சட்டத்தை பயன்படுத்தி, நாங்களும் திருப்பித் தாக்குவோம்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராம், கந்தசாமி, செல்வராஜ், முன்னாள் மேயர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடல் நல குறைவால், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்கவில்லை.