பொதுவுடைமை கொள்கைகளையும் நடுத்தர வர்க்க மக்களின் பிரச்னைகளையும் தனது நகைச்சுவை மூலம் உலகுக்குப் பறைசாற்றிய தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். தனது நாடக வசனங்கள், சினிமா நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் மூலம் தனது சிந்தனைகளை எடுத்துரைத்த அவர், நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் சாமானியர்களின் பொருளாதார சிக்கல்களை தனது திரைப்படைப்புகள் பலவற்றில் அலசி ஆராய்ந்தவர்.
'முதல் தேதி' 1955 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் இப்படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது. இதில் இவர் பாடி நடித்த 'சம்பள தேதி ஒண்ணுல இருந்து இருபதுவரை கொண்டாட்டம், 21-லிருந்து 30 வரை திண்டாட்டம்' என்கிற பாடல் அப்போது பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இன்று ஆங்கில இதழ்களில் பொருளாதார நிபுணர்கள் கூறும் பட்ஜெட் கருத்துகளை அப்போதே இந்தப் பாடலில் கூறியிருப்பார் கலைவாணர்.
![]()
|
கணவன், மனைவி இருபிள்ளைகள் கொண்ட நடுத்தர குடும்பங்கள் பலவற்றில் மாதாமாதம் 20 ஆம் தேதிவரை மளிகை, சினிமா, ஷாப்பிங் என செலவழித்துவிட்டு அடுத்த பத்து நாட்களை சிரமப்பட்டு கடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கிராமம் முதல் நகரம்வரை அனைத்து மாத சம்பள குடும்பங்களிலும் இந்நிகழ்வு தொடர்கதையாகி விட்டது.
பிள்ளைகள் படிப்பை முடித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைத் தாங்கமாட்டார்களா, அதுவரை மாதாமாதம் பற்றாக்குறையுடன் காலத்தை கடத்திவிடமாட்டோமா என ஏங்கும் குடும்பங்கள் இன்றளவும் இருக்கவே செய்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாததுதான். சரி..! மாதத்தில் கடைசி பத்து, பன்னிரெண்டு நாட்களை சுலபமாகக் கடத்த வழிகள் என்னென்ன எனப் பார்ப்போமா?
கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் பெரும்பாலும் ஒருவருடைய சம்பளம் சேமிப்புக்கும், மற்றவரது சம்பளம் மாத செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும். ஆனால் கணவன் மட்டும் வேலைக்குச் செல்லும் நடுத்தர குடும்பங்களில் மாத பட்ஜெட்டில் சேமிப்புக்கு முக்கிய இடம் அளிப்பது அவசியம்.
![]()
|
வாடகை, மின் கட்டணம், வீட்டுப் பராமரிப்புக் கட்டணம், கேஸ், அலைபேசி, வைஃபை கட்டணங்கள், குழந்தைகளின் தனியார் வகுப்பு செலவுகள், மளிகை, காய்கறி, பால் கணக்கு, நகை சேமிப்புத் திட்டம், சீட்டுக் கட்டணம் உள்ளிட்ட அன்றாட மாத செலவுகளை 10ஆம் தேதிக்குள் முடித்துவிடுவது நல்லது.
தண்ணீர் வரி, சொத்து வரி, வாகன மெயின்டனென்ஸ், குழந்தைகளின் பள்ளி டேர்ம் கட்டணம், ஏசி, வாட்டர் ஃயூரிஃபையர் மெயின்டனன்ஸ் உள்ளிட்ட அரையாண்டு மற்றும் ஆண்டு செலவுகளை முன்னரே திட்டமிடுவது நல்லது.
மாதத்தின் முதல் வாரத்தில் கணினி அல்லது செல்போனில் பட்ஜெட் தயாரித்து ஒரு நாளைக்கு சராசரியாக செலவாகும் தொகையை கணக்கிட்டு அதை 30 முதல் 31 நாட்களுக்கு சமமாகப் பகிர்ந்துகொள்வது நல்லது. இது கடைசி பத்து நாட்களை சுலபமாக செலுத்த உதவும்.
![]()
|
மாதக் கடைசியில் எதிர்பாரா மருத்துவ செலவு உள்ளிட்ட சில அவசர செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களது ஆடம்பர ஷாப்பிங் செலவுகளை 15 ஆம் தேதிக்குள் முடித்துவிடுவது நல்லது.
குழந்தைகள் மற்றும் முதியோர் உள்ள வீடுகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் மருத்துவ செலவுகளுக்காக முன்னரே திட்டமிட்டு நிதி ஒதுக்குவது நல்லது.
இணையத்தில் எங்கு பார்த்தாலும் கிரெடிட் கார்டு விளம்பரங்கள் உங்களைக் கவரும். சம்பள உயர்வு, போனஸ் வரும் வேளையில் கிரெடிட் கார்ட் வாங்க ஏற்படும் மோகத்தைத் தடுப்பது அவசியம். நிரந்தர கடனாளியாக வாழ்வதைக் காட்டிலும் திட்டமிட்டு வாழ்வதே நம் முன்னோர் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடம் என்பதை மனதில் கொள்ளவும்.
முடிந்தவரை ஆன்லைன் உணவு டெலிவரியைத் தவிர்க்கவும். இது ஒருவகை கட்டாய செயல். ஒருமுறை இவ்வாறு ஆர்டர் செய்து பழகினால் நாம் மீண்டும் மீண்டும் இதேபோல ஆன்லைன் உணவு சாப்பிட்டு பட்ஜெட்டில் துண்டு விழச் செய்வோம். இதற்கு பதிலாக வீட்டில் சுவையான உணவுகளைத் தயார் செய்து சாப்பிட்டால் பட்ஜெட்டுடன் நமது ஆரோக்கியமும் காக்கப்படும்.
இன்று பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் ஓடிடி தளங்களும் ஸ்மார்ட் டிவியும் அவர்களது பட்ஜெட்டுக்கு நன்மை செய்கின்றன. பெரிய ஸ்மார்ட் டிவியில் ஓடிடி தளங்களில் வெளிவரும் புதுப்படங்களை இன்று பலர் குடும்பத்துடன் ஞாயிறு இரவில் பார்த்து மகிழ்வதால் திரையரங்கு, வாகன பார்கிங், ஸ்னாக்ஸ் செலவு கணிசமாகக் குறைகிறது. இதனை தொடர்ந்து பின்பற்றுவது நல்லது.
நடுத்தர வர்க்கத்திடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில கெட்ட விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது பக்கத்து வீட்டு பொருளாதார நிலமையைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்வது. இன்று பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளதா எனத் தெரியாமல் சமூக அந்தஸ்துக்காக பள்ளிக் கட்டணத்துக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர். இது தவறு.
உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எதில் உள்ளது எனக் கண்டறிந்து அதில் அதிக பணத்தை செலவு செய்தால், அது ஒரு நீண்டகால முதலீடாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். உதாரணமாக ஒரு குழந்தைக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளபட்சத்தில் இசைப் பாடம் கற்க பணம் செலவழிக்கலாம். இசையில் ஆர்வமே இல்லாத குழந்தையை இசைப்பாடம் கற்க அனுப்புவது உங்கள் பணத்தை மட்டுமின்றி அவர்களது மனத்தையும் பதம்பார்க்கும்.
கணவன், மனைவி இருவரும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுத்துகொள்வது நல்லது. தனியார் நிறுவனங்கள் பல, தற்போது ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.