வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கஞ்சா போதை ரவுடிகளுக்கு பயந்து கடையை மூடிவிட்டு சிமென்ட் வியாபாரி ஓடினார்.

திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 56. இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தில் சுபம் டிரேடர்ஸ் என்ற பெயரில் சிமென்ட் கடை வைத்திருக்கிறார்.
இவரது கடைக்கு அருகில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகள் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதால் இவரது கடை வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை ரவுடிகள் முத்துராமலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். நெமிலி போலீசில் அவர் புகார் அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

பயந்து போன முத்துராமலிங்கம், கடை ஷட்டரில் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதில் கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால், இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது, பாதுகாப்பு கருதி, சுபம் டிரேடர்ஸ் என எழுதி நோட்டீஸ் ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு நேற்று சென்று விட்டார்.
இந்த செய்தி சமூக வளைதலங்களில் வைரலாகியது. இந்நிலையில் தக்கோலம் போலீசார் வியாபாரியை சமாதானப்படுத்தியதால், அவர் இன்று (மார்ச் 16) காலை 10:00 மணிக்கு கடையை திறந்தார். சிறிது நேரத்தில் கஞ்சா போதையில் வந்த ரவுடிகள் பிரச்னை செய்ததால் மீண்டும் கடையை மூடிவிட்டு அவர் ஓடி விட்டார்.