
பாவடை தாவணியில் பார்த்த உருவமா? என்ற பாடலைப் பாடி ஒரு மாணவியை கேலி செய்தததன் காரணமாக இரண்டு கல்லுாரி மாணவர்களிடையே பெரும் மோதலே ஏற்பட்டது என்று தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.
சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யாபவனும்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ம் இணைந்து கவியரசர் கண்ணதாசனைக் கொண்டாடும் காலங்களில் அவன் வசந்தம் தொடர் நிகழ்ச்சியினை இசைக்கவி ரமணன் நடத்திவருகிறார்.
84 வது நிகழ்ச்சியில் புஷ்பவன் குப்புசாமி கலந்து கொண்டு கண்ணதாசன் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.கண்ணதாசனை படிக்க ஆரம்பித்த பிறகு தனக்குள் சினிமா கவிஞர் கண்ணதாசனைவிட இலக்கியக்கவிஞர் கண்ணதாசனே தன்னை ஆளுமை செய்ததாக குறிப்பிட்டார்.

அவரது சில கவிதைகளை தானே மெட்டுப்போட்டு பாடி வருவதாக கூறியவர் அதில் சில பாட்டுக்களை பாடியும் காட்டினார் கவிதைகளை பாட்டாக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது இது எளிதில் கண்ணதாசனை இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்று குறிப்பிட்டார் இசைக்கவி ரமணன்.
கல்லுாரியில் படிக்கும் போது தனக்கு பாடத்தெரியாது என்றும் சும்மா மேடையேறியதற்காக அப்போது பிரபலமாக இருந்த கண்ணதாசனின் ஒரு பாட்டைப்பாட பலத்த வரவேற்பு கேன்டீனில் மூணு தோசை சாப்பிடுபவனுக்கு ஆறு தோசை கிடைத்தது முகம் தெரியாதவர்கள் எல்லாம் கூப்பிட்டு பாராட்டினர் அப்போதுதான் தெரிந்தது ஒரு பாட்டுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் என்று அப்புறம் பாடிப்பாடி வாழ்க்கையே பாடகனாக மாறிவிட்டது என்னை மாற்றியவர் கண்ணதாசனே என்றார்.
தன்னானே தானேனே என்று நாட்டுப்புற மெட்டை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தோடு சினிமா பாட்டை முடிச்சு போட்டு பாடியது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டலை பெற்றுத்தந்தது.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று டிஎம்எஸ் போல பாட யாராலும் முடியாது அப்படி ஒரு முயற்சி எடுத்தாலே பாதி பாடலிலேயே அழுதுவிடுவேன் ஆகவே அந்தப்பாடலை எங்கு பாடினாலும் அடக்கியே வாசிப்பேன் என்று கூறிவிட்டு இந்தப்பாடலை எந்தக் கணவர் தன் மணைவியைப் பார்த்து பாடினாலும் அவர்களுக்குள் எந்த சிக்கலும் வராது என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் புஷ்பவனம் குப்பசாமிக்கு தேர்ந்த ரசிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
-எல்.முருகராஜ்