காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, 14 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, வரும் 26ல் காலை 4:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
இதில், ஆறாம் நாள் உற்சவமான மார்ச் 31ல், காலை அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு வெள்ளித்தேர் உற்சவமும் நடக்கின்றன.
ஏழாம் நாளான ஏப்., 1ல் காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண விழா, ஏப்., 4 இரவு நடக்கிறது.
அதன் பின், ஏப்., 5ல், அதிகாலை திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, தங்க இடபத்தில் சுவாமி எழுந்தருளும் விசேஷ உற்சவம் நடக்கிறது.
இவ்விழாவைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து செல்வர்.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு நிழல் தரும் வகையில், கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.