கோவை:எண்ணும் எழுத்தும் திட்டத்தை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும், பரப்புரை வாகனத்தை, நேற்று, முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடக்க வகுப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள, கற்றல் இடைவெளி குறைக்க, எண்ணும் எழுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அடிப்படை கணிதம், எழுத்துகளை அறிமுகப்படுத்துதல், வாசித்தல் பயிற்சியை வழங்கும் நோக்கில், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், மாணவர்களுக்கு அதிக எழுத்துப்பயிற்சி இல்லை. இதனால், குழந்தைகள் வீட்டில் படிப்பதில்லை என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், கற்றல் திறன் மேம்படுத்துவதற்கு, மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், வாகன பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில், டவுன்ஹால், டி.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் நேற்று, பரப்புரை வாகனம் புறப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் பூபதி துவக்கி வைத்தார்.
நாட்டுப்புற கலைஞர்கள் குழுவுடன், இந்த வாகனம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றது. தொடர்ந்து, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 20ம் தேதி வரை, வாகன பரப்புரை வண்டி செல்லும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.