பணம் பறித்த வாலிபர் கைது
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 47. நேற்று முன்தினம் சவுரிபாளையம் ஏரி மேடு பிரிவில் நடந்து சென்றார். அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1,500-ஐ பறித்து தப்பிச் சென்றார். ராமநாதபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து பணத்தை பறித்தது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிக்குமார், 23, என கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
போன் திருடிய இரண்டு பேர் கைது
கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,65; விவசாயி. காந்திபுரத்தில் பஸ் வந்ததும் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, வாலிபர் ஒருவர் பறித்து தப்பினார்.
கிருஷ்ணசாமியின் சத்தத்தை கேட்டு, அங்கிருந்தவர்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர் ஆந்திராவை சேர்ந்த சின்னா, 22,என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
* காந்திபுரத்தை சேர்ந்தவர் அருண் ராஜ், 25. இவர் வீட்டில் மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் மொபைல் போனை திருடி தப்பிச் சென்றார். புகாரின்படி ரத்தினபுரி போலீசார் விசாரித்து, மொபைல் போன் திருடிய திருச்சி துறையூரை சேர்ந்த ராம்கி, 34, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிகரெட் விற்ற டீ மாஸ்டர் கைது
கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி ஒன்றில் சோதனை செய்தனர். அங்கு அனுமதியின்றி சிகரெட், பிடி போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தெரிந்தது. போலீசார் பேக்கரி டீ மாஸ்டரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பைக் திருடியவர் கைது
கோவை இடையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன், 45. இவர் வைசியாள் வீதியில் இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது கடையில் இருந்த ஒரு பைக்கை, வாட்டர் சர்வீஸ் செய்ய எடுத்துச் சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி கடைக்குள் சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. தேடி பார்த்த போது, ஒருவர் அந்த பைக்கை ஓட்டி வந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரித்ததில் அவர் பி.பி.வீதியை சேர்ந்த பேச்சி மணி, 50, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.