உடுமலை:வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதுடன், குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், குடிமங்கலம் வட்டாரத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி மற்றும் குறிஞ்சேரி ஆகிய ஊராட்சிகளும் பயன்பெற்று வருகின்றன.
திட்டத்தின் கீழ், முழுமையாகவும் குடிநீர் தடை இல்லாமல், அனைத்து ஊராட்சிகளுக்கும் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டில், துவங்கி முடிக்கப்படாமல் உள்ள பணிகளை, உடனடியாக முடிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்திட்டத்தில், தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, 8 சுய உதவிக்குழுக்களுக்கு, 70.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கடனுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் -பத்மநாபன், உதவி இயக்குனர் மதுமிதா, குடிமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.