திருநீர்மலை :திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி விழாவின் ஒரு பகுதியாக, நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. இதில், 3,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நான்கு கோலங்களில், பெருமாள் காட்சி அளிக்கிறார்.
சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, மார்ச், 10 முதல் 19ம் தேதி வரை, பங்குனி விழா நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடக்கிறது. பங்குனி விழாவின் ஒரு பகுதியாக, நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், 3,000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.