திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று கூறியதாவது:
மும்பையில், 12 ஏக்கர் நிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் அமைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் பெருமாள் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெருமாள் கோவில்கள் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பத்மாவதி தாயார் கோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. திருச்சானுார் தவிர சென்னையில் தான் தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் ஆரம்பத்தில், 10 கோடியில் கட்ட முடிவு செய்தோம். பல நன்கொடையாளர்கள் முன்வந்ததால், 15 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான நிலம், நடிகை காஞ்சனா குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
திருச்சானுாரில் நடப்பது போன்று அனைத்து திருவிழா, உற்சவங்களும் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் நடத்தப்படும்.
வெகு விரைவில், வெங்கடேஸ்வர சுவாமிக்கு தற்போது உள்ள இடத்திலேயே பிரமாண்ட கோவில் கட்டப்பட உள்ளது.
அதேபோல, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னையில், 500 நபர்களுக்கு இலவச திருமணம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.