மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில், 200 டன் தர்பூசணி பழம் விற்பனையாகிறது. வெயில் அதிகம் உள்ளதால் மக்கள் இப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.
வெயில் காலம் என்றாலே, தர்பூசணி பழத்தின் விற்பனை அதிகமாக இருக்கும். இப்பழத்தை சாப்பிடும் போது, உடலின் வெப்பம், எவ்வித மருந்து மாத்திரை இல்லாமல், இயற்கையான முறையில் குறைகிறது. அதனால் இப்பழத்தை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இது குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தர்பூசணி பழ வியாபாரி சலீம் கூறியதாவது:
தமிழகத்தில் காஞ்சிபுரம், திண்டிவனம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விளையும் தர்பூசணி பழங்கள், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. முதலில் மானாவாரியாக இப்பழம் பயிர் செய்யப்பட்டது. தற்போது தர்பூசணி பழத்தின் தேவை அதிகரித்ததால், சொட்டுநீர் பாசன முறையில் விவசாயிகள், அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர். நாம்தாரி 295, அர்ச்சனா, மதுபாலா, மகாராஜா, அபூர்வா ஆகிய தர்ப்பூசணி பழ வகைகளை விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.
ஒரு ஏக்கரில், 350 கிராம் விதை விதைத்தால், சொட்டு நீர் பாசன முறையில், 70 நாளில் பழங்கள் அறுவடை செய்யலாம். இயற்கை உரம் போட்டு நன்கு பராமரித்தால், ஒரு ஏக்கரில் ஒரு டன் வரை பழம் கிடைக்கும். 55 இருந்து, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தற்போது பழங்களின் தேவை அதிகரித்துள்ளதால், தோட்டத்திலேயே ஒரு கிலோ தர்பூசணி பழம், 12, 13 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அறுவடை செய்தல், லாரியில் ஏற்றுதல், லாரி வாடகை, கடை வாடகை என பல்வேறு செலவுகள் உள்ளதால், ஒரு கிலோ பழம், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய மூன்று பகுதிகளில் வாரம், 200 டன் தர்பூசணி பழங்கள் விற்பனையாகிறது. நீரழிவு, இதய நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமனாக உள்ளவர்கள், இப்பழத்தை சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. வெயில் காலத்தில் இப்பழத்தை சாப்பிடும் போது, உடலில் வெப்பம் குறைந்து, சூடு தணியும். இவ்வாறு அவர் கூறினார்.