புதுடில்லி, :காதலி ஏமாற்றியதால், அதற்கு இழப்பீடாக, காதலனுக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது என்ற தகவல், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரதீக் ஆர்யன் என்பவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நானும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி காதலித்தோம். அப்போது, வங்கியில் இருவரது பெயரிலும் இணைப்பு கணக்கு துவக்கினோம். இதில் மாதந்தோறும் இருவரும், தலா 500 ரூபாய் 'டிபாசிட்' செய்தோம்.
'நம்மில் யார், மற்றொருவரை ஏமாற்றினாலும் அல்லது காதலை முறித்தாலும், வங்கியில் நம் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் மற்றவருக்கு கொடுக்க வேண்டும்' என, எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
இந்த வங்கி கணக்கிற்கு, 'காதல் முறிவு காப்பீடு' என பெயர் வைத்தோம். இந்நிலையில், சமீபத்தில் என் காதலி, காதலை முறித்து என்னை ஏமாற்றினாள்.இதையடுத்து, ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, வங்கியிலிருந்த 25 ஆயிரம் ரூபாயும் எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பலரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.