வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை மாவட்டத்தில் ஏப்.,1ல் இருந்து, மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் துவங்கவுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் வாட்டமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 5,700க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாகும் மது பாட்டில்களில், 'பார்'களில் குடிப்போர், பாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அவை பார் காண்ட்ராக்டர்களால் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் வெளியில் மற்றும் வீடுகளில் குடிப்போர், காலி பாட்டில்களை பொதுவெளிகளில் வீசிவிடுகின்றனர். இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மலைப்பகுதிகளில் வனப்பகுதிகளில் வீசப்படும் காலி பாட்டில்களால், வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்நிலைகளில் வீசப்படுவதால், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண வேண்டுமென்று, ஐகோர்ட் அளித்த உத்தரவின்பேரில், நீலகிரியில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; அங்குள்ள 75 கடைகளில், தினமும் 900 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இத்திட்டத்தில், மது பாட்டில் விலையுடன் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறது; அந்த பாட்டிலை ஸ்டிக்கருடன் மதுக்கடை அல்லது 'பார்'களில் கொடுத்தால், அந்த 10 ரூபாயை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பல்
நீலகிரியில் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ள ஐகோர்ட், அடுத்தகட்டமாக கோவை மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் இத்திட்டத்தை, 2023 ஏப்., 1லிருந்து செயல்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள இரண்டு டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள 294 கடைகளிலும், திட்டத்தை வரும் ஏப்.,1லிருந்து செயல்படுத்துவதற்காக, மதுக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் காண்ட்ராக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திட்டம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
![]()
|
குழப்பம்
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கோவையில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கடுமையான ஆள் பற்றாக்குறை உள்ளது. சரக்கு விற்பனை, கணக்குப் பார்ப்பது, வங்கிப் பணிகள், சரக்குகளை இறக்குவது, பாதுகாப்பாக அடுக்குவது, கடை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் டாஸ்மாக் பணியாளர்களே பார்க்க வேண்டியுள்ளது. உடைந்த பாட்டில்களின் கணக்கும் இவர்கள் கணக்கில்தான் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தினால், அந்தப் பணியைப் பார்க்கவே ஒரு ஆள் தேவைப்படும். அது மட்டுமின்றி, நகர்ப்புறங்களில் கடைகளின் அளவே 10 அடிக்கு 12 அடி என்ற அளவில்தான் இருப்பதால், சரக்கு பாட்டில்கள், காலிப் பெட்டிகளை வைப்பதற்கே இடமில்லாத நிலை உள்ளது. இதில் காலி பாட்டில்களை வாங்கி எங்கே அடுக்குவது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. வெளியில் வைத்தால் அதைப் பாதுகாப்பதும் சிரமம் என்பதால் ஊழியர்கள் புலம்பித் தவிக்கின்றனர். இதற்கான மாற்றுத் திட்டங்களை அரசு யோசித்து, அதை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நீலகிரியில் 75 மதுக்கடைகளில், தினமும் திரும்பப் பெறப்படும் 900 மது பாட்டில்களை எடுத்துச் செல்ல தனி காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பாட்டில்களை கோவைக்குக் கொண்டு வந்து தரம் பிரிக்கின்றனர். பீர் பாட்டில்களை மட்டும், மறு உபயோகத்துக்கு அனுப்பிவிட்டு, மற்ற பாட்டில்களை மறுசுழற்சிக்கு விற்கின்றனர். கோவையில் கடைகள், விற்பனை அதிகம் என்பதால், நிறையப்பேருக்கு பிரித்து காண்ட்ராக்ட் விட வாய்ப்புள்ளது. இதைப் பெறுவதற்கு ஆளும்கட்சியினர் தீவிரமாகவுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-