வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : ''கருணாநிதியை போலவே, மகன் உதயநிதிக்காக, தி.மு.க.,வை அழிக்கிறார் ஸ்டாலின்,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதை கண்டித்து, திருப்பூரில், அக்கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மீது, பல்வேறு பிரிவுகளில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை துவக்கிய போது, திருப்பூரை சேர்ந்த ஒருவர், எம்.ஜி.ஆர்., மீது வழக்கு போட்டார். அப்போது முதல் இப்போது வரை, திருப்பூர் அ.தி.மு.க.,வின் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையாக மாறிவிட்டது.
வெகு விரைவில் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பி விட்டு, மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இந்த பொய் வழக்குகளுக்கு, அப்போது பதில் சொல்ல வேண்டி வரும். விடியலை தருவதாக சொல்லி விடியாத ஆட்சி நடக்கிறது.
இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்தார் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின், பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தார்; ஆனால், இன்னும் வழங்கவில்லை.
விலைவாசி உயர்வால், எளிய, நடுத்தர மக்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். கருணாநிதி குடும்பமோ, கோட்டையில் அமர்ந்து கொண்டு விளையாடுகிறது. பொய் வழக்குகளை வாபஸ் பெறவில்லை என்றால், அதி.மு.க,, சார்பில், தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.