வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேனி: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பது தெரியவந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின், திராங் பகுதியில் உள்ள போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த, நம் ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர், நேற்று (மார்ச் 16) காலை 9:15 மணி அளவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி முழு வீச்சில் நடந்தது. கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேடுதல் பணியில் ராணுவம் ஈடுபட்டது. கிழக்கு மண்டலாவில் உள்ள பங்லஜாப் கிராம மக்கள் மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக உள்ளூர் போலீசிடம் தெரிவித்தனர்.
அங்கு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பனிமூட்டமான சூழ்நிலையால் அப்பகுதியில் மீட்பு பணிகள் தாமதமானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில், பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பதை அறிந்ததும் அவரது சொந்த ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் இன்று (17.3.23) பெரியகுளம் கொண்டுவரப்பட இருக்கிறது.
முதல்வர் இரங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரருக்கு வீர வணக்கம். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். ராணுவ வீரர் மறைவால் வாடும் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், நாட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.