திருநெல்வேலி:துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 130 ரூபாய் கூடுதலாக வசூலித்த சுங்கச்சாவடி நிறுவனம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மேகலிங்கபுரம் வழக்கறிஞர் திருமலை நம்பி, 50, என்பவர், 2021 பிப்., 13ல் துாத்துக்குடிக்கு நான்கு வழிச்சாலையில் காரில் சென்றார்.
வாகைகுளம் சுங்கச்சாவடியில் 65 ரூபாய் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தினார். ஆனால் அவரது பாஸ்ட் ட்ராக் கணக்கில் இருந்தும் 65 ரூபாய் டோல்கேட் பிடித்தம் செய்யப்பட்டது. அதே நாளில் மீண்டும் துாத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் போதும் அவர் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தினார்.
அப்போதும் பாஸ்ட் ட்ராக் கணக்கிலிருந்து 65 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.
இது குறித்து டோல்கேட் நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், டோல்கேட் நிர்வாகம் திருமலைநம்பிக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.