உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்புலியூர் கிராமம். இப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 690 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1040 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
இந்த ஏரி, கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. ஏரிக்கரை மற்றும் ஏரி நீர்பிடிப்பு பகுதி முழுதுமாக ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, முட்புதர் காடாக காட்சி அளிக்கிறது.
இதனால், மழைக்காலங்களில் ஏரியில் சேகரமாகும் தண்ணீர் விரைவில் வறண்டு போகும் நிலை உள்ளது.
மேலும், ஏரிக்கரை முழுதும் சீமைக் கருவேல மரங்களாக உள்ளதால், அப்பகுதி விவசாயிகள், விவசாயப்பணிகள் சார்ந்து டிராக்டர், மாட்டு வண்டி போன்ற வாகனங்களை ஏரிக்கரை மீது இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்த ஏரியை சீரமைக்க கடந்த 2020ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நிர்வாக சிக்கல் காரணமாக அப்பணி துவங்காமலேயே கைவிடப்பட்டது. எனினும் ஏரியை சீர் செய்ய அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்று, அரும்புலியூர் ஏரிக்கரை மற்றும் மதகுகள் முழுமையாக சீரமைத்து, கரை பலப்படுத்தவும், நீர்வரத்து கால்வாய் பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் ஜல்சக்தி துறை சார்பில், 'டிரிப்பிள்'ஆர்., திட்டத்தின் கீழ் 1.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை விழா அரும்புலியூர் ஏரியில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., சுந்தர் பூமி பூஜை விழாவில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன் மற்றும் இளநிலைப் பொறியாளர் மார்கண்டன், ஊராட்சி தலைவர் வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.