பொன்னேரி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டையை நோக்கி பேரணி செல்வது தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று பொன்னேரி கோட்ட அலுவலக வாயிலில், விளக்க கூட்டம் நடந்தது.
இதில், மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
மின் வாரிய பணியாளர்களுக்கு, 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்; மின் வாரியத்தில் உள்ள, 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மின்வாரிய ஊழியர்களின் சலுகைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும்.
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது தொடர்பாக, இம்மாதம், 28ம் தேதி, அனைத்து தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கோட்டையை நோக்கி பேரணியாக செல்வது குறித்து தொழிலாளர்களிடம், தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு மின் வாரிய தொழிலாளர்களின் மேற்கண்ட கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில், திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.