இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்திய வங்கி அமைப்பு தொடர்ந்து வலுவாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்றார். அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால், வங்கித் துறை மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கும் சூழலில் இக்கருத்தை அவர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அமெரிக்க வங்கி அமைப்பு அழுத்தத்தில் உள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் (SVB) தோல்விக்குப் பிறகு, மேலும் இரண்டு வங்கிகளும் அமெரிக்காவில் மூடப்பட்டன. அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டாளர்கள் மார்ச் 10 அன்று சிலிக்கான் வேலி வங்கியை (SVB) கட்டுப்பாட்டில் எடுத்தனர். டெபாசிட் பணத்தைப் பாதுகாக்க அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வங்கியில் இருந்து டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கிய பிறகு வங்கிக்கு அழுத்தம் அதிகரித்தது. மக்களுக்கு பணத்தை விநியோகிக்க வங்கி பத்திரங்களில் வைத்திருந்த தனது முதலீட்டை விற்க வேண்டியிருந்தது. வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் பத்திரங்களில் செய்திருந்த முதலீட்டின் மதிப்பு குறைந்திருந்தது. எஸ்.வி.பி., வங்கி கடந்த வாரம் ரூ.14,400 கோடி நஷ்டத்தில் யு.எஸ்., டிரஷரீஸ் மற்றும் மார்ட்கேஜ் ஆதரவு கொண்ட ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை விற்றது. இதனால் உலகளவில் வங்கி அமைப்புகளின் செயல்பாடு குறித்த சந்தேகம் எழுந்தது. அதனை தெளிவுப்படுத்தும் வகையில் ஆர்.பி.ஐ., கவர்னர் பேசியுள்ளார்.
![]()
|
பெடரல் வங்கி ஏற்பாடு செய்த கே.பி.ஹார்மிஸ் 17வது நினைவு உரையில் ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது: வங்கி அமைப்பின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய வங்கி அமைப்பு வளர்ச்சியடைந்த விதம் மற்றும் அது தற்போது நிலைநிறுத்தப்பட்ட விதத்தினால் வலுவானதாக இருக்கும்.
அமெரிக்காவில் வங்கி அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், விவேகமான சொத்து - கடன் மேலாண்மை, வலுவான ரிஸ்க் மேலாண்மை, கடன் மற்றும் சொத்துக்களில் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கோவிட் தொற்றுநோயின் உச்சத்தின் போது, அதன் ஆழம் தெரியவில்லை. அதனால் கூடுதல் மூலதனங்களை உருவாக்க வங்கிகளை தொடர்ந்து வலியுறுத்தினோம். வங்கி அவற்றை உருவாக்கின. இவ்வாறு தெரிவித்தார்.