தட்சிண கன்னடா--'கிரிப்டோகரன்சி'யில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, தொழிலதிபரிடம் 1.24 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
தட்சிண கன்னடா, மங்களூரைச் சேர்ந்த மதகரி ஷெட்டி என்ற தொழிலதிபருக்கு 2021ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜிஜோ ஜான், 45, என்பவர், 'வாட்ஸ் ஆப்' வழியே அறிமுகமானார்.
அப்போது ஜிஜோ ஜான், 'நான் பிரபல பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும்' எனக் கூறியுள்ளார்.
மேலும், வங்கி கணக்கு விபரங்களையும் அனுப்பி வைத்திருந்தார். இதற்கிடையில் கொரோனா காலம் என்பதால், இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடியவில்லை. மொபைல் போனில் தான் பேசி கொண்டனர்.
இந்நிலையில், ஜிஜோ ஜான் பேசியதை நம்பிய மதகரி ஷெட்டி 2021 மார்ச் முதல் ஜூன் வரை அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். முதல் முறை பணம் செலுத்தியபோது, கிரிப்டோகரன்சி மூலமாக 10 சதவீதம் லாபம் கிடைத்தது.
இதையடுத்து, அவர் மீண்டும் மீண்டும் கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தார். மொத்தம் 1.24 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தார். அதன்பிறகு அந்த பணம் அவருக்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து சந்தேகம் அடைந்த மதகரி ஷெட்டி, உடனே ஜிஜோ ஜானை தொடர்பு கொண்டு, பேச முயற்சித்தார். அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த மதகரி ஷெட்டி, உடனே மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஜிஜோ ஜானை தேடி வருகின்றனர்.