ஆவடி, தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகள், கடந்த 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் பல பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை, நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், காலை மட்டுமின்றி மதிய நேரத்திலும், மாணவர்கள் அரசு பேருந்தை நம்பி இருக்கின்றனர்.
இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும், தடம் எண்- '61 ஆர், 61 கே, எஸ் 52' உள்ளிட்ட பேருந்துகள், தேவைக்கு ஏற்ப இயக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால், தேர்வு முடிந்து செல்லும் மாணவர்களும், மதியம் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், உரிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், தேர்வுகள் நடப்பதால் ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் விடுப்பு எடுக்காமல் வர வேண்டும் என, நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதை அவர்கள் பின்பற்றாததால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மாணவர்கள் கூறுகையில்,'தற்போது அரசு பொதுத் தேர்வு நடக்கிறது.
ஆனால், சரியான பேருந்து வசதி இல்லாததால், குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தேர்வுக்கு தாமதமாக செல்லும் நிலையும் உள்ளது. எனவே, தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.