- நமது நிருபர் - அ.தி.மு.க., - பா.ஜ., இடையே நடந்த குஸ்தியால் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை என்பதை, சென்னையில் நேற்று நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது, கூட்டணி உறவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மோடியிடம் பேசி முடிவெடுக்க தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலின் போது, 'ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' என்று அண்ணாமலை விரும்பினார்.
அதை, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி விரும்பவில்லை. அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு, 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, பா.ஜ., தரப்புக்கு அ.தி.மு.க., மீது வருத்தத்தை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.,வை, பா.ஜ.,வில் சிலர் விமர்சித்தனர். அண்ணாமலையும் தன் வருத்தத்தை தெரிவித்தார். பதிலுக்கு அண்ணாமலையை, அ.தி.மு.க., தலைவர்கள் விமர்சித்ததோடு, தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் என்பவரை, அ.தி.மு.க.,வுக்கு இழுத்தனர். அண்ணாமலையை, '420 - மலை' என விமர்சித்து, நிர்மல் அறிக்கை வெளியிட்டார்.
இது, அ.தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ.,வில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், துாத்துக்குடி மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி உள்ளிட்ட சிலர், பழனிசாமி உருவப் படத்தை எரித்தனர்.
பதிலுக்கு அ.தி.மு.க., தரப்பிலும் அண்ணாமலை உருவப்படம் எரிக்கப்பட்டது. இறுதியில், அ.தி.மு.க., தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி மற்றும் பா.ஜ., தரப்பில் வானதி சீனிவாசன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த ஒரு வாரமாக எந்த சம்பவமும் நடக்காததால், இரு கட்சிகளுக்கு இடையே சமரசமாகிவிட்டது போல் தோற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில், பழனிசாமியின் துாதராக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான த.மா.கா., தலைவர் வாசன், கடந்த 15ம் தேதி, தனித்தனியே பிரதமரை டில்லியில் சந்தித்தனர்.
அப்போது, 'அ.தி.மு.க., - பா.ஜ., இடையேமோதல் ஏற்பட்டதற்கு அண்ணாமலை தான் காரணம்' என, தம்பிதுரை தெரிவித்ததோடு, அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார் வைத்ததாக தெரிகிறது. வாசன், 'அ.தி.மு.க., கூட்டணி இல்லாமல் தி.மு.க.,வை எதிர்கொள்வது சிரமம்' என்று பேசினார். இதையடுத்து, மேலிடத்தில் இருந்து அண்ணாமலைக்கு அழுத்தம் தரப்பட்டதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
தொடர்கிறது...
இந்நிலையில், சென்னை, அமைந்தகரை அய்யாவு திருமண மண்டபத்தில், நேற்று பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், அண்ணாமலை பேசியதில் இருந்து, அ.தி.மு.க.,வுடன் நடந்த குஸ்தியால் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை என்பது வெளிப்பட்டு உள்ளது.
அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பா.ஜ.,வை ஆட்சி பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற தீராத வேட்கையோடுதான், ஐ.பி.எஸ்., பொறுப்பை விட்டு விட்டு, தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தேன். அதை நோக்கியே என் ஒவ்வொரு அரசியல் நகர்வும் இருந்தது; இருக்கிறது.
ஆனால், சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று, பலரும் வற்புறுத்துகின்றனர். கூட்டணியிலும் நிறைய சமரசங்களை செய்யச் சொல்கின்றனர்.
சமரசம் செய்து கூட்டணி ஏற்படுத்தி, அதன் வழியில் செல்ல வேண்டும் என்றால், அதற்கு அண்ணாமலை தேவையில்லை. அப்படியொரு சமரசம் தேவை என்றால், அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு அவசியமில்லை. கூட்டணி சமரசங்கள் செய்து, கட்சியை கட்டமைத்துச் செல்ல, இங்கேயே நிறைய தலைவர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் கட்சியை வழி நடத்தலாம். அப்படியொரு கூட்டணி அமைந்தால், தொண்டனோடு தொண்டனாக இருந்து பா.ஜ.,வுக்கு உழைக்கவே அண்ணாமலை விரும்புவான். எப்படி இருந்தாலும், யார் வலியுறுத்தினாலும் கூட்டணி விஷயத்தில் சமரசம் கிடையாது. பா.ஜ.,வை தனித்து போட்டியிட வைத்து வெற்றி அடைய செய்து, ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதை நோக்கிய அரசியலை செய்வேன். மற்றதை, கர்நாடகாவில் என் தேர்தல் பணியை முடித்து, மே 10க்குப் பின் பார்த்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
'தமிழகம் விரும்பும் அடையாளம்'
தொடர்ந்து, கட்சியின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பேசுகையில்:இங்கே பேசியது அண்ணாமலை இல்லை. வழக்கமான அண்ணாமலை இப்படி பேச மாட்டார். என்ன நடந்து விட்டது என்று இப்படி விரக்தியுடன் பேசுகிறீர்கள். குள்ள நரிகள் ஓலமிடுவதற்காக, சிங்கங்கள் பதுங்கக் கூடாது.
கர்நாடக தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக நீங்கள் நியமிக்கப்பட்ட போதே, சிலர் உங்களை ஓரங்கட்டப் போகின்றனர் என கூறினர். அதற்கு வலுசேர்ப்பது போல் நீங்கள் பேசுவது குழப்பமாக உள்ளது. நீங்கள் தலைவர் இல்லை. தமிழகம் விரும்பும் அடையாளம். அதனால், முடிவு எதுவானாலும், அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உங்களை விடுவித்து விட்டு கூட்டணி என்றால், அந்த சமரசம் பா.ஜ.,வுக்கும், தொண்டனுக்கும் தேவையில்லை.
என்று பேசியதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
'கூட்டணி கூடாது'
இறுதியில் நன்றி தெரிவித்து, மீண்டும் அண்ணாமலை பேசியதாவது:உயர பறக்கும் பருந்துக்கு இரையை பிடிக்கும் எல்லா திறனும் இருக்க வேண்டும். மழை பெய்தால், அந்த சமயத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள, மேகத்துக்கு மேல் சென்று பருந்து பறக்கும். பின், சூழல் சரியானதும், அதே வேகத்தோடு கீழே இருக்கும் இரையை பிடிக்கும்.
மொத்தத்தில் பருந்து, எந்த கட்டத்திலும் தனக்கு பிறர் ஆதரவை தேடுவதில்லை. அப்படிப்பட்ட பருந்தாக தமிழக பா.ஜ., இருக்க வேண்டும். இது அண்ணாமலை விருப்பம். அண்ணாமலை ஒரு நாளும் தன் நிலையில் இருந்து தாழ்ந்து போக மாட்டான்.
கூட்டணி வேண்டும் என்றால், அங்கே அண்ணாமலைக்கு இடமில்லை. வருமுன் எதிர்கொள்ள எல்லாரும் தயாராக இருப்போம். இப்போதைக்கு எதுவும் நடந்து விடவில்லை. மே 10க்குப் பின் என்ன சூழல் என்பதை பார்த்து விட்டு, அதற்கேற்ப நம்முடைய செயல்பாடுகளை கட்டமைத்துக் கொள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, கட்சியின் மற்ற நிர்வாகிகள் பலரும், 'அண்ணாமலையின் விருப்பப்படி, கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால்தான் வெற்றியடையும். அதுதான் மக்கள் விருப்பம். பிரதமர் வரும்போது, இதுபற்றி பேசி முடிவெடுக்கலாம்' என, கூறியுள்ளனர்.
பா.ஜ.,வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''பா.ஜ.,வுக்கு தனிப்பட்ட நபர்கள் முக்கியமல்ல; தேசியமும், நாடும் தான் முக்கியம். தேசம் நன்றாக இருக்க, தேசிய தலைமை என்ன நிலைப்பாடு எடுத்து செயல்பட வலியுறுத்துகிறதோ, தலைவர்களும், தொண்டர்களும் அதை முழு மனதோடு ஏற்று செயல்பட வேண்டும்,'' என, நேரடியாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.