கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அமுதம் காலனி உள்ளது. இதன் அருகில், மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளன.
இந்த நகரை சுற்றி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி பூங்காவிற்கு, நகராட்சிக்கு சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.
பூங்காவை சீரமைத்து தருமாறு, அப்பகுதியைச் சேர்ந்தோர் பலமுறை நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக, அமுதம் காலனி அரசு ஊழியர்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, அமுதம் காலனி பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி இடம் உள்ளது.
இந்த இடத்தில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைத்து தரக் கோரி, அமுதம் காலனி அரசு ஊழியர்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், நிர்வாகிகள் மனு வழங்கி பல மாதங்கள் ஆகின்றன.
ஆனால், இதுவரை, நகராட்சி சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்திற்கு பாதுகாப்பு வேலி இல்லை.
இதனால், இந்த இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, சமூக விரோதிகள் சிலர், போலி 'ரியல் எஸ்டேட்' புரோக்கர்கள் என, தினமும் இந்த இடத்தை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த இடம், நகராட்சிக்கு சொந்தமானது என, நகராட்சி சார்பில் பெயர் பலகை வைத்திருந்தனர். தற்போது, சமூக விரோதிகள், அந்த விளம்பர பலகையை அப்புறப்படுத்தி விட்டார்கள்.
இது குறித்து, நகராட்சிக்கு புகார் தெரிவித்து இருந்தோம். எனவே, பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.