கோவை:கோவை மாவட்டத்தில், இதுவரை, 14.46 லட்சம் வாக்காளர்களே, ஆதார் எண்களை இணைத்திருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன், 100 சதவீதம் பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, ஆதார் எண் இணைக்கும் பணியை, கலெக்டர் முடுக்கி விட வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும், 30 சதவீத வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதில்லை. இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் ஆய்வு செய்தபோது, ஒரே வாக்காளருக்கு பல்வேறு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது; உயிரிழந்தவர்கள் பெயர் நீக்காமல் இருப்பது; முகவரி மாறிச் சென்றிருந்தாலும் பழைய இடத்தில் உள்ள பதிவை நீக்காமல் இருப்பது தெரியவந்தது.
47.48 சதவீத வாக்காளர்கள்
வாக்காளர்களின் ஆதார் எண்களை இணைத்தால், 100 சதவீதம் பிழையில்லாத பட்டியல் தயாரிக்கலாம் என தேர்தல் ஆணையம் கருதியது. இப்பணி, தமிழகத்தில் கடந்தாண்டு ஆக., மாதம் துவக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 30 லட்சத்து, 46 ஆயிரத்து, 243 வாக்காளர்களில், இதுவரை, 14 லட்சத்து, 46 ஆயிரத்து, 491 வாக்காளர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஏழு மாதங்களில், 47.48 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண்களே பெறப்பட்டிருக்கின்றன. இன்னும், 15 லட்சத்து, 99 ஆயிரத்து, 752 வாக்காளர்களிடம் ஆதார் எண் பெற வேண்டியிருக்கிறது.
எதிர்பார்ப்பு
மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், கோவை தெற்கு தொகுதியில் மிக குறைவாக ஒரு லட்சத்து மூன்றாயிரத்து, 408 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்திருக்கின்றனர். கவுண்டம்பாளையம், சூலுார், மேட்டுப்பாளையம் தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள், இணைத்துள்ளனர்.
இனி, பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் பிரிவினர் தயாராக வேண்டும். 2024 ஜன., வந்தால், தேர்தல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்படும்.
அதற்குள், வாக்காளர் பட்டியலை தயார்படுத்த வேண்டும். ஆனால், சில மாதங்களாக ஆதார் எண் இணைக்கும் பணி சுணக்கமாகி இருக்கிறது.
தேர்தலில், 100 சதவீதம் பிழையில்லாத வாக்காளர் பட்டியல் பயன்படுத்த வேண்டுமெனில், ஆதார் எண் இணைப்பு பணியை கலெக்டர் கிராந்திகுமார் முடுக்கி விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'வாக்காளரே, ஆதார் எண் இணைக்கலாம். அதற்கு, nvsp என்ற இணைய வசதி, voter helpline 'மொபைல் ஆப்' வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதால், ஒரு வாக்காளருக்கு ஒரு இடத்தில் மட்டுமே ஓட்டுரிமை இருக்கும். ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் ஓட்டுரிமை இருந்தால், எந்த இடத்தில் நீங்கள் ஓட்டுப்போட விரும்புகிறீர்கள் என அவர்களிடமே கேட்கிறோம்; அவர்கள் சொல்லும் இடத்தில் வாக்காளர் பெயர் தொடர்ந்து இருக்கும்; மற்ற இடங்களில் இருந்த பதிவுகள் நீக்கப்படும்' என்றனர்.