''தஞ்சை பிரகதீசுவரர் கோவில் வளாகத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதனால், கோவிலின் புனிதத் தன்மை கெட்டு போய் விட்டது,'' என, ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, ராம.ரவிக்குமார் கூறியதாவது:தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னம். இக்கோவிலை, தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்து பராமரித்து வருகிறது. கோவிலை நிர்வகிப்பது, பூஜைகள், விழாக்கள் நடத்தும் பொறுப்பை, ஹிந்து அறநிலைய துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பொறுப்பு
தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆகமங்கள் உள்ளன. கோவிலின் புனிதத் தன்மைக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, கோவில் நிர்வாகத்தின் பொறுப்பு. ஒரு வாரத்துக்கு முன், கோவிலுக்கு வந்த மாற்று மத குடும்பம், கோவில் வாயிலில் அமர்ந்து, 'மட்டன்' மற்றும் 'சிக்கன்' பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அந்த சம்பவத்தை சிலர் 'வீடியோ' எடுத்தனர். அதை அறிந்ததும், உடனடியாக அங்கு வந்த நிர்வாகிகள், காவலர்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களை விரட்டி உள்ளனர். இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது. கோவிலுக்குள் சென்று சுற்றி பார்த்தேன். வேறு சில அசிங்கங்களும் அரங்கேறுவதாக பலர் குறைபட்டனர். எந்த மதத்தை பின்பற்றுவோரும் தஞ்சை பெரிய கோவிலுக்குள் வந்து வழிபடலாம்; தடை எதுவும் கிடையாது. ஆனால், எக்காரணம் கொண்டும், கோவில் புனிதம் கெட்டு விடக் கூடாது.
கடிதம்
ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் தான் நடந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பு. இனி, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கக் கூடாது. அதற்கு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஹிந்து அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.'கோவிலில் அசைவம் சாப்பிட்டால், அது கோவிலின் புனிதத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்ற பதற்றமும், இறைவன் மீது பக்தியும் கோவிலை நிர்வகிக்கும் அறங்காவலருக்கும், அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்.
'அத்தகைய உணர்வு இல்லாதவர்கள், கோவில்களை பராமரிப்பது மிகப் பெரிய தவறு' என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.