சினிமா இயக்குனர் டி.ராஜேந்தர்:
நாட்டில் மது வேண்டாம் என்பதற்காகவே, நான் ஒரு படம் எடுத்தேன். இதற்கு முன் பக்தவத்சலம், ராஜாஜி, காமராஜர் காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. மதுவை யார் கொண்டு வந்தது என்ற ஆராய்ச்சியே வேண்டாம். அதனால் ஏற்படும் சீரழிவு அதிகம்; அரசுக்கு எல்லாம் தெரியும். நாம் செய்யும் பிரசாரத்தை செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
![]()
|
டவுட் தனபாலு:
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை...மதுவின் தீமைகளை விளக்கி, நீங்களே ஒரு படத்தை இயக்கி, அதுல உங்க மகன் சிம்புவையே நடிக்க வைக்கலாமே... 'டவுட்'டே இல்லாம, நிறைய பேர் திருந்திடுவாங்க!
தி.மு.க., அமைப்புச் செயலர்ஆர்.எஸ்.பாரதி:
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சி முன்னோடிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பொது மக்களுக்கு சிரமம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 'பேனர், கட் அவுட், பிளக்ஸ் போர்டு'கள் வைக்கக்கூடாது. ஆனால், ஒன்று, இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக, உரிய அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்கலாம்.
டவுட் தனபாலு:
பேனரால இளம்பெண் சுபஸ்ரீ இறந்தப்ப, 'இனி 'பேனர்'களே வைக்க மாட்டோம்' என, ஐகோர்ட்ல உத்தரவாதம் கொடுத்ததுல உங்க கட்சியும் உண்டு... இப்ப, ஒண்ணு, ரெண்டு மட்டும் வைக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்... யார் அந்த ஒண்ணு, ரெண்டு பேர்னு, உங்க கட்சியினரே தங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு, ஒரு உள்நாட்டு கலவரத்தையே உருவாக்கிட மாட்டாங்களா என்ற, 'டவுட்' வருதே!
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில், 50 ஆயிரம்மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் எங்கே போயினர்; ஏன் வரவில்லை என்பது, எங்களுக்கு மிகவும்கவலை அளிக்கிறது. 'ஆப்சென்ட்' ஆன மாணவர்களில், 38 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள்; 8,500 பேர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.
![]()
|
டவுட் தனபாலு:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் திறன் எப்படி இருக்கிறது என்பதும், தனியார் பள்ளிகளில் எப்படி இருக்கிறது என்பதும், நீங்க தர்ற புள்ளி விபரங்கள்ல இருந்தே, புலனாகுது என்பதில், 'டவுட்'டே இல்லை!