சென்னை:''பெண் போலீசார், இனி 'ரோல் கால்' எனும் காவல் அணிவகுப்புக்கு, காலை 8:00 மணிக்கு வந்தால் போதும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக காவல் துறையில், பெண் போலீசார் நியமனம் செய்து, 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று பொன் விழா நடந்தது.
சாகச நிகழ்ச்சிகளை, பெண் போலீசார் செய்து காட்டினர். பொன் விழா நினைவு தபால் உறையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான 'அவள்' திட்டம் மற்றும் சென்னை - கன்னியாகுமரி இடையிலான, 100 பெண் போலீசாரின் சைக்கிள் பேரணியையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழக காவல் துறையில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். தற்போது, ஒரு டி.ஜி.பி., உட்பட, 33 ஆயிரத்து, 329 பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். முதல்வர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசார் நிறுத்தப்படுவது வழக்கம்.
இதைத் தவிர்க்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன். பெண் போலீசார், குடும்பத் தலைவியாகவும், கடினமான காவல் துறையிலும் பணியாற்றுவதால், இனி இவர்கள், 'ரோல் கால்' எனும் காவலர் வருகை அணிவகுப்புக்கு, காலை 7:00 மணிக்கு வர வேண்டாம்; 8:00 மணிக்கு வந்தால் போதும்.
சென்னை, மதுரையில், பெண் போலீசாருக்கு விரைவில் விடுதிகள் கட்டித் தரப்படும்.
பணிக்கு வரக்கூடிய பெண் போலீசாரால், குழந்தைகளை பரமரிப்பதில் சிரமமாக உள்ளது. இதனால், மாநிலம் முழுதும் காவல் குழந்தைகள் காப்பகம் துவங்கப்படும்.
பெண் போலீசாருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, அவரது பெயரில் காவல் பணி விருதும், கோப்பையும் வழங்கப்படும்.
பெண் போலீசாருக்கு அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப, விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்கப்படும்.
பெண் போலீசாருக்கு, ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு மற்றும் விருதுகள் தரப்படும். தேசிய அளவில் பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டியை, தமிழகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
டி.ஜி.பி., அலுவலகத்தில், பெண் போலீசாருக்கு பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.