விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, பேச மறுத்த காதலியை வெட்டிக் கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் சுகன் மகள் தரணி, 19; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ் ராஜ், 22; என்பவரை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கணேஷ்ராஜ் அடிக்கடி தரணி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கணேஷ்ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த தரணி, சில தினங்களாக, அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தரணியின் வீட்டிற்குச் சென்றார். தரணியிடம், 'என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்' எனக் கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தரணியின் கழுத்து, தலையில் வெட்டினார்.
தரணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், கணேஷ்ராஜ் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த தரணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தரணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரப்பாக்கம் கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த கணேஷ்ராஜை கைது செய்தனர்.