இன்றைய ஹைடெக் உலகில் நம்மை காலையில் படுக்கையில் இருந்து எழுப்பிவிடுவதே நமது ஸ்மார்ட்போன்தான். ரிங் அடிக்கும் சப்தத்தை அடுத்து ஸ்மார்ட்போன் திரையைப் பார்த்தால் ஒரு அன்நோன் நம்பர் தெரியும். அழைப்பை ஏற்று பேசினால், 'உங்கள் வங்கிக் கணக்கில் மூன்று லட்சம்வரை கிரெடிட் செய்ய ஏற்ற கிரெடிட் கார்ட் ஆஃபர் உள்ளது. இதனைப் பெற எங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்' என ரோபோ வாய்ஸ் கேட்கும்.
தூக்கக் கலக்கத்துடன் எரிச்சல் அடைந்து போனை கட் செய்துவிடுவோம். மதியம், மாலை, இரவு என நேரம் தவறாமல் இந்த பெண் ரோபோ வாய்ஸ் கால் கேட்கும். மேலும் அடிக்கடி நிதி நிறுவன பிபிஓ அழைப்புகள் நமது பணி நேரத்தில் நாம் முக்கிய வேலை செய்துகொண்டிருக்கும் சமயத்தில் தொந்தரவு செய்யும். பல நேரங்களில் பலர் பிபிஓ ஆசாமிகளின் இதுபோன்ற தொந்தரவுக்காக, அதீத கூச்சலிட்டு சண்டையிடுவதையும் கண்டிருப்போம்.
![]()
|
மேட்ரிமோனி அழைப்பு, நிதி நிறுவன அழைப்பு, வேலை வாய்ப்பு இணையதள அழைப்பு, ஆன்மிக சுற்றுலா அழைப்பு, கிரெடிட் கார்டு ஆஃப்ர் அழைப்பு, கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறும் போலி நிறுவனங்களின் ஏமாற்று அழைப்பு என ஒரு நாளில் கிட்டத்தட்ட 10 தேவையற்ற அழைப்புகள் நமது நாளை தொந்தரவு செய்வதில் முக்கிய இடத்தை எடுத்துக்கொள்ளும். இதுபோன்ற புரொமோஷன் அழைப்புகள், ரோபோ கால்களிடம் இருந்து தப்பிக்க வழி இல்லையா எனக் கேட்டால் கண்டிப்பாக உண்டு. இது என்ன எனப் பார்ப்போமா?
ஆர்டெல், ஜியோ உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டுநாட் டிஸ்டர்ப் (Do not disturb) எனப்படும் டிஎன்டி (DND) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
உதாரணமாக, ஜியோ நிறுவனத்தின் மை ஜியோ செயலிக்குச் சென்று செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதில் அனைத்து புரொமோஷன் கால்களையும் முடக்கும் டிஎன்டி ஆப்ஷனும், சில கால்களை மட்டுமே முடக்கும் ஆப்ஷனும் இருக்கும். இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்வு செய்துவிட்டால் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும். அனாவசிய கால்களில் இருந்து தப்பிக்கலாம். டிஎன்டி ஆப்ஷனை தேர்வு செய்துவிட்டதால் உங்கள் தனியார் செயலி ஓடிபி எஸ்எம்எஸ் சேவை பாதிக்கப்படாது. அத்தியாவசிய ஒடிபிக்கள், சேவை கால்கள் வருவதில் எந்த சிக்கலும் இதனால் இல்லை.